Published : 22 Sep 2020 11:18 AM
Last Updated : 22 Sep 2020 11:18 AM
விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதை எதிர்த்து எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தன்னை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவமதித்து விட்டனர், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது, தூக்கம் வரவில்லை எனவே 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விவசாய மசோதாக்களை எதிர்க்கிறோம் என்று, ஜனநாயகத்தின் பெயரில் வன்முறையாகச் செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஹரிவன்ஷ் மீது காகித கணைகள் வீசப்பட்டன. இதனையடுத்து ஹரிவன்ஷ் மனமும் இதயமும் உடைந்து விட்டதாகவும் தூக்கமிழந்ததாகவும் பிஹார் எம்.பி.ஒருவரும் கடிதம் எழுதியுள்ளார்.
செப்20ம் தேதி என் கண் முன்னே நடந்தது அவை, அவைத்தலைமையின் மரியாதைக்கும் கண்ணியத்துக்கும் கற்பனைக்கெட்டாத அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ள ஹரிவன்ஷ், தேசியக்கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினம் புதனன்று வருகிறது, அன்று அவரது கவிதையிலிருந்து சில வரிகளைப் படித்துக் காட்டி உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன் என்று ஹரிவன்ஷ் கூறியுள்ளார்.
விவசாய மசோதாக்களை எதிர்த்து போராட்டம் செய்த டெப்ரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராஜேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர் ஹூசைன், எலமாரன் கரீம் ஆகிய எம்.பி.க்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பார்லிமென்ட் வளாகத்தில் 8 எம்.பி.,க்களும் இரவு முழுவதும் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பி.,க்களுக்கு இன்று (செப்.,22) காலையில் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹர்வன்ஷ் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால், அதனை வாங்க எம்.பி.,க்கள் மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து தேநீர் கொடுத்த ஹரிவன்ஷின் செயலை வெகுவாகப் பாராட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT