Published : 22 Sep 2020 07:04 AM
Last Updated : 22 Sep 2020 07:04 AM
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வேளாண் துறை தொடர்பான ‘கிருஷி பவன்’ என்ற கட்டிடத்தை முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த 2018 செப்டம்பரில் திறந்து வைத்தார். மூன்று மாடிகளுடன் சுமார் 80 ஆயிரம் சதுர அடியில் மிகவும் கலைநயத்துடன் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
கல்வி மையம், பொது நூலகம், கலையரங்கம், தோட்டம், கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள், அருங்காட்சியம் என பல்வேறு பிரிவுகளை இக்கட்டிடம் கொண்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக் கலை இயக்குநரகங்களின் தலைமையகமும் இங்கு செயல்படுகிறது.
இந்தக் கட்டிடம் கவுரவமிக்க சர்வதேச விருதான ‘ஏஇசட்’ விருத்துக்கு (AZ Award) தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான ஏஇசட் விருதுகளில் சமூகப் பயன்பாடு கட்டிடப் பிரிவில் மக்களின் விருப்பத் தேர்வாக இந்தக் கட்டிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பதிவில், “ஒடிசாவின் கட்டிடக் கலை அற்புதமான ‘கிருஷி பவன்’ மாநிலத்துக்கு மற்றொரு சிறப்பை சேர்ந்துள்ளது. இந்த விருதை ஒடிசாவின் விவசாயிகள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களால்தான் இந்த விருது சாத்தியமானது. அவர்களிடம் இருந்தே இந்த கட்டிட வடிவமைப்புக்கான உத்வேகம் பெற்றோம்” என கூறினார்.
கட்டிடக் கலை தொடர்பான புகழ்பெற்ற சர்வதேச இதழான ‘டெசீன்’ இதழில் இடம்பெற்ற இந்தியாவின் முதல் அரசுக் கட்டிடம் மற்றும் ஒடிசாவின் முதல் கட்டிடம் என்ற பெருமையை இதற்கு முன் ‘கிருஷி பவன்’ பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment