Last Updated : 21 Sep, 2020 10:20 PM

 

Published : 21 Sep 2020 10:20 PM
Last Updated : 21 Sep 2020 10:20 PM

தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்ற முனையமாக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்  

புதுடெல்லி

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்ற முனையமாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பியான கனிமொழி வலியுறுத்தினார். மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் இதற்காக அவர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து தூத்துக்குடி தொகுதி எம்.பி.யான கனிமொழி, ''வ.உ.சி துறைமுகம், பல்வேறு சர்வதேச கப்பல் போக்குவரத்தின் ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது. இங்கு சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்ற முனையமாக அமைக்கத் தேவையான வசதிகள் உள்ளன. எனவே, இதை உடனடியாக அமைக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.

தூத்துக்குடி துறைமுகமானது, சர்வதேச சரக்குக் கப்பல் போக்குவரத்துகளை அதிகமாகக் கொண்டுள்ளதால் அதை, சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்ற முனையமாக மாற்றுவதால், இலங்கையில் முதலீடுகளை அதிகரித்து வரும் சீனாவுக்குப் பதிலடியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து எம்.பி. கனிமொழி மேலும் கூறுகையில், ''தற்போது, இந்திய சரக்குப் பெட்டகங்களில் 60 சதவிகிதத்துக்கும் மேல் கொழும்பில் பரிவர்த்தனை செய்து வருகின்றன. இதன் காரணமாக, நமது ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு சரக்குப் பெட்டகத்துக்கும் கூடுதல் தொகை செலுத்த வேண்டியுள்ளது.

இதன் காரணமாக ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியா பின்தங்குவதோடு அல்லாமல், அந்நியச் செலாவணி கூடுதலாக வெளியே செல்வதற்கும் வழிவகுக்கிறது. இத்தகைய சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்ற முனையம், சேது சமுத்திர திட்டத்தைச் செயல்படுத்த ஒரு ஊக்கமாக அமையும்.

இத்துடன், கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சரக்குப் பெட்டகப் பரிவர்த்தனை மையங்களைப் பயன்படுத்தாமல், கப்பல்கள், தூத்துக்குடி துறைமுக சரக்குப் பெட்டகப் பரிமாற்ற முனையத்தைப் பயன்படுத்த உத்வேகம் அளிக்கும்.

இத்தகைய வசதி மேற்கொள்ளப்பட்டால், கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்லாமல் தூத்துக்குடி துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொள்ள வசதி ஏற்படுத்தும்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x