Published : 21 Sep 2020 05:39 PM
Last Updated : 21 Sep 2020 05:39 PM
மத்திய போலீஸ் கேண்டீன்களில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் சுதேசிப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
''மத்திய போலீஸ் கேண்டீன்கள் (சிபிசி) கேந்திரிய போலீஸ் கல்யாண் பாந்தர் (KPKB) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளன. இதில் 119 மாஸ்டர் பாந்தர் மற்றும் 1,871 துணை பாந்தர் போன்றவை பணியில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற மத்திய போலீஸாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
10 மினி பாந்தர் கேண்டீன்கள், முன்னாள் மத்திய போலீஸ் படை அமைப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மினி கேண்டீன்கள், மாஸ்டர் கேண்டீன்களுக்குக் கட்டுப்பட்டு இயங்கும்.
உள்நாட்டுத் தொழில்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் அனைத்து கேந்திரிய போலீஸ் கல்யாண் பாந்தர்களிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கேந்திரிய போலீஸ் கல்யாண் பாந்தர் கேண்டீன்களுக்கு தரமான பொருட்கள் அனைத்தும் உற்பத்தி விலைக்கே, சலுகைகளுடன் நேரடியாக நிறுவனங்கள், சப்ளையர்கள் மூலம் சப்ளை செய்யப்படுகிறது.
பொருட்களின் தரத்தைப் பொறுத்தவரை, கேந்திரிய போலீஸ் கல்யாண் பாந்தர் பொருட்கள் பதிவு செய்யும் முன், மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு விதிகளும், வழிகாட்டி நெறிமுறைகளும் உறுதி செய்யப்படும்.
கேந்திரிய போலீஸ் கல்யாண் பாந்தர் சப்ளை செய்யப்படும் பொருட்களுக்கும், சிடிஎஸ் கேண்டீன்களுக்கு சப்ளை செய்யப்படும் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு ஏதும் அளிக்கப்படவில்லை''.
இவ்வாறு அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் 1,700 மத்திய போலீஸ், சிஏபிஎப் கேண்டீன்கள் செயல்படுகின்றன. சிஆர்பிஎப், பிஎஸ்எப், ஐசிபிபி, சிஎஸ்ஐஎப், என்எஸ்ஜி, எஎஸ்எஸ்பி ஆகிய படைப்பிரிவில் பணியாற்றும் 10 லட்சம் பேர் இதில் உறுப்பினர்கள். சுமார் 50 லட்சம் குடும்பங்கள் இந்த கேண்டீனில் பொருட்களை வாங்குகின்றன.
இந்நிலையில் கடந்த மே 13-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டில் உள்ள 1,700 மத்திய போலீஸ், சிஏபிஎப் கேண்டீனுக்குக் கடிதம் எழுதியிருந்தது.
இதில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் கேண்டீன்களில் உள்நாட்டில் தயாரித்த (சுதேசி) பொருட்களை மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும், மற்ற பொருட்களை விற்பனை செய்யத் தடை விதித்திருந்தது. அதற்கான வரையறையைத் தெரிவித்திருந்தது.
அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் மூலம் தயாரித்திருந்தால் விற்கலாம். ஆனால், முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அந்த உத்தரவு குறித்து ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் அந்த உத்தரவை நிறுத்திவைத்தது. திருத்தப்பட்ட உத்தரவு வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், மத்திய அமைச்சர் அளித்த எழுத்துபூர்வ பதிலில் ஜூன் 1-ம் தேதி முதலே சுதேசிப் பொருட்கள்தான் விற்பனையாகின்றன எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT