Published : 21 Sep 2020 01:50 PM
Last Updated : 21 Sep 2020 01:50 PM
ஜனநாயக இந்தியாவில் பேசவிடாமல் அடக்குமுறை தொடர்கிறது. முதலில் பேசவிடாமல் தடுத்தார்கள், அதன்பின் எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள் என்று எதிர்க்கட்சிகளின் 8 எம்.பிக்களை மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதங்களைக் கிழித்து அவையின் துணைத் தலைவர் மீது எறிய முயன்றனர். இதனால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வரம்பு மீறி நடந்து கொண்டதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இன்று காலை அவை கூடியதும், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நேற்று நடந்த சம்பவங்களுக்கு கடும் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்தார். அவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், டோலா சென், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், சயத் நசீர் ஹூசேன், ரிபுன் போரா, இந்தியக் கம்யூனிஸ்ட் எம்.பி. கேகேராகேஷ், மார்க்சிஸ்ட் எம்.பி. இளமாறன் கரீம் ஆகியோரைக் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதாகவும் அறிவித்தார்.
8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஜனநாயக இந்தியாவில் பேசவிடாமல் அடக்குமுறை தொடர்கிறது. முதலில் பேசவிடாமல் தடுத்தார்கள், அடுத்து நாடாளுமன்றத்திலிருந்து எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். கறுப்பு வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளை அறியாமல் அரசு கண்களைக் மூடிக்கொண்டது.
அனைத்தும் அறிந்ததாக கூறிக்கொள்ளும் இந்த அரசின் முடிவற்ற அகங்காரம்தான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்குப் பேரழிவைக் கொண்டுவந்துள்ளது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவது பாவமா? சர்வாதிகாரிகள் நாடாளுமனறத்தைப் பிணைக் கைதிகளாக வைத்திருக்கிறார்களா?
அதிகாரத்தின் கீழ் நீங்கள் இருந்தாலும், உண்மையின் குரலை நீங்கள் கேட்கிறீர்களா? விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், நாடாளுமன்றம் என எத்தனை குரல்களை உங்களால் அடக்க முடியும் மோடிஜி” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT