Published : 21 Sep 2020 08:28 AM
Last Updated : 21 Sep 2020 08:28 AM
முன்னூறுக்கும் குறைவாக பணியாளர்க்களை கொண்டுள்ள நிறுவனங்கள் ஊதியம் இல்லா விடுப்பு (லே-ஆப்) அளிப்பதற்கு இனி அரசின் அனுமதி பெறத் தேவையில்லை. இதற்கான தொழில் உறவு வரைவு மசோதா 2020, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தொழிலாளர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போதைய சட்டத்தின்படி 100 பணியாளர்களுக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட நிறுவனங்கள் மட்டுமே லே-ஆப் அளிக்க அரசின் அனுமதி பெறத் தேவையில்லை.
தொழில் உறவு வரைவு மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா திரும்பப் பெறப்பட்டு புதிய மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
முந்தைய மசோதாவில் 300-க்கும் குறைவான பணியாளர் களைக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் சேர்க்கவும், நீக்கவும்அரசின் அனுமதி பெறத் தேவையில்லை என்பதாக இருந்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
தொழிற்சாலை பாதுகாப்பு, சுகாதாரம், வேலை சூழல் உள்ளிட்டவை குறித்த தனித்தனி மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட்டன.
காங்கிரஸ் தலைவர்கள் மனீஷ் திவாரி, சசி தரூர் ஆகியோர் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா குறித்து அனைத்து கட்சியினருடன் கலந்து பேசி பிறகு அறிமுகம் செய்யலாம் என திவாரி கூறினார். இது ஊழியர்களின் உரிமையை பாதிப்பதாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மசோதாவை தாக்கல்செய்து பேசிய அமைச்சர் சந்தோஷ் கங்வார், தொழில் துறை சட்டங்களில் 29 சட்ட பிரிவுகள் 4 ஆககுறைக்கப்பட்டு அவை அனைத்தும் ஒப்புதல் பெறப்பட்டதாக கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT