Published : 07 Sep 2015 12:50 PM
Last Updated : 07 Sep 2015 12:50 PM
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை நியமிக்க இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
அதாவது தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநில சட்டப்பேரபைத் தேர்தல்கள் 2016 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறலாம். இந்த தேர்தல்கள் முடியும் வரை ராகுல் காந்தியை தலைவராக்கும் முடிவை ஒத்தி வைக்க காங்கிரஸ் கட்சித் தலைமை முடிவெடுத்திருப்பதாக கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, இந்தத் தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டால் அது ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதால் தேர்தல்கள் முடிந்த பிறகு தலைமைப் பொறுப்பை ராகுலுக்கு அளிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே ராகுல் காந்தி கட்சித் தலைவராகியிருப்பார், ஆனால் வரலாறு காணாத தோல்வி காரணமாக அந்த முடிவு ஒத்தி வைக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு முடிவில் ராகுல் காந்தி தலைவராகி விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ராகுல் காந்தி 2 மாத காலம் ஓய்வு எடுத்துக் கொள்ள சென்று விட்டது காங்கிரஸின் திட்டத்தில் பின்னடைவு ஏற்படுத்தியது. ஆனால் மீண்டும் வந்த ராகுல் காந்தி சுறுசுறுப்பான அரசியல் களத்தில் குதித்து தீவிரமாக செயலாற்றினார். இதனையடுத்து பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி தலைவராகி விடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இப்போது அவர் கட்சித் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்ள தயாராக இல்லை என்று கட்சியின் உயர்மட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
பாஜக-வின் இந்த 15 மாத கால ஆட்சியில் பொருளாதார சீர்த்திருத்தங்கள் வாயிலாக மோடி அரசு சில பின்னடைவுகளைச் சந்தித்தாலும், அது காங்கிரஸுக்கு சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தவில்லை என்று கருதப்பட்டதால் ராகுல் காந்தியை தலைமைப் பதவிக்கு உயர்த்தும் திட்டம் மேலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT