Last Updated : 20 Sep, 2020 10:58 AM

1  

Published : 20 Sep 2020 10:58 AM
Last Updated : 20 Sep 2020 10:58 AM

சீனாவுடன் எல்லை விவகாரத்தில் பேச்சு நடத்தும் போது, ஏன் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தக் கூடாது?: ஃபரூக் அப்துல்லா கேள்வி

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா மக்களவையில் பேசிய காட்சி

புதுடெல்லி


சீனாவுடன் கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் மத்திய அரசு பேச்சு நடத்தும் போது, ஜம்மு காஷ்மீர் எல்லை பிரச்சினையில் அண்டை நாடான பாகிஸ்தானுடன் ஏன் மத்திய அ ரசு பேச்சு நடத்தக்கூடாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபருக் அப்துல்லா மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யயப்பட்டபின் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வீட்டுக் காவலில் ஃபரூக் அப்துல்லா வைக்கப்பட்டிருந்தார். அவருக்காக நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் குரல் கொடுத்தபின், ஃபரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டபின் ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப்பின் முதல் முறையாக மக்களவையில் ஃபரூக் அப்துல்லா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் அதிகாரிகள் 4ஜி சேவையை ரத்து செய்தபின் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. 4ஜி சேவை ரத்து என்பது மாணவர்கள், வர்த்தகர்களின் நலனுக்கு எதிரானதாக இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் வேலையிழந்து இருக்கிறார்கள், பொறியாளர்கள் பெரிய சங்கம் அமைத்து பணியாற்றவர்களும் நிறுத்திவிட்டார்கள்.

இந்தியா முன்னேற்றம் அடைந்தால், அதோடு சேர்ந்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமும் வளர்வதற்கும், மேம்படுவதற்கும் உரிமை இல்லையா

ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன, மக்கள் மடிவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. பேச்சு வார்த்தை தவிர்த்து, இதற்கு தீர்வு காண வேண்டும்.

சீனாவுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுக்குப்பின்புதான், கிழக்கு லடாக்கில் தனது படைகளை சீன ராணுவம் வாபஸ் பெற்றது. சீனாவுடன் எல்லை விவகாரம் தொடர்பாக பேச முடியும் என்றால், ஏன் அண்டை நாட்டுடன்(பாகிஸ்தான்)பேச்சு நடத்தக்கூடாது.

சோபியான் மாவட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து ராணுவம் விசாரணை நடத்த உத்தரவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. உயிரிழந்த அந்த 3 பேருக்கும் பெரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அந்த 3 பேரும் ராணுவத்தின் தவறுதலாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். ராணுவத்தினர் ஆயுதப் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்ைத அதிகமாகப் பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்தப்படும் என ராணுவ அதிகாரிகள் கூறியிருப்பதும் வரவேற்கக்கூடியதுதான். நான் வீட்டுக் காவலில் இருந்தபோது எனக்காக நாடாளுமன்றத்தில் பேசிய அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்

இவ்வாறு ஃபரூக் அப்துல்லா பேசினார்.

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஃபரூக் அப்துல்லா பேசியவுடன் மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் சத்தமிட்டு முழுக்கமிட்டனர். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலையிட்டதால், கூச்சல் அடங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x