Published : 20 Sep 2020 06:58 AM
Last Updated : 20 Sep 2020 06:58 AM
திவால் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. தொழில்கள் பலவும் முடங்கின.
இந்நிலையில் நிறுவனங்கள் வாங்கியக் கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லையெனில் அவை வாராக்கடனாகக் கருதப்பட்டு நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பது திவால் சட்டத்தின் அடிப்படை அம்சம்.
இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக அனைத்தும் முடங்கியதால், மார்ச் மாதத்தில் இருந்து 6 மாதங்கள் எந்தவித புதிய திவால் நடவடிக்கைகளும் நிறுவனங்கள் மீது எடுக்க கூடாது என திவால் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
திவால் சட்டம் தொடர்பாக அவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘திவால் சட்டம் நிறுவனங்களின் தொடர்ச்சியான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டதே தவிர, அவற்றை கைப்பற்றி, விற்பனை செய்வதற்காக அல்ல’’ என்று கூறினார்.
இது தொடர்பாக ஜூன் மாதத்தில் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. தற்போது அந்த அரசாணைக்குப் பதிலாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT