Last Updated : 19 Sep, 2020 05:28 PM

 

Published : 19 Sep 2020 05:28 PM
Last Updated : 19 Sep 2020 05:28 PM

ஒவ்வொரு தகவலுக்கும் 1000 டாலர்; இந்தியப் பாதுகாப்பு ரகசியங்களை பணத்துக்காக விற்ற இந்தியப் பத்திரிகையாளர், சீனப் பெண் உள்பட 3 பேர் கைது: டெல்லி போலீஸார் நடவடிக்கை

டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சர்மா | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

இந்தியாவின் பாதுகாப்பு, எல்லை விவகாரங்கள் குறித்த முக்கியத் தகவல்களை இந்தியப் பத்திரிகையாளரிடம் இருந்து பணம் கொடுத்துப் பெற்று சீன உளவுத்துறைக்குக் கடத்த முயன்ற சீனப் பெண், அவரின் நேபாள உதவியாளர், இந்தியப் பத்திரிகையாளர் ஆகியோரை டெல்லி போலீஸார் ரகசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்தியப் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா பல்வேறு நாளேடுகளிலும் பணியாற்றிய அனுபவமுடையவர். தற்போது எந்த நாளேட்டிலும் பணியாற்றாமல் எழுதி வருகிறார். இவர் அதிகமாக சீனாவின் 'தி குளோபல் டைம்ஸ்' நாளேட்டில் எழுதி வந்துள்ளார்.

இதுகுறித்து காவல் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காவல் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ்

''இந்தியப் பாதுகாப்புத் துறை தொடர்பான தகவல்கள், எல்லைப் பகுதியில் செய்து வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் சீனாவுக்குக் கடத்தப்படுவதாக கடந்த 14-ம் தேதி உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்தன.

உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில் டெல்லி பிதாம்புரா பகுதியில் வசித்துவரும் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மாவை நேற்று கைது செய்தோம். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சீனப் பெண் ஒருவர், அவரின் உதவியாளரான நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளோம்.

பத்திரிகையாளர் சர்மாவிடம் இருந்து ஏராளமான பணத்தைப் போலி நிறுவனங்கள் மூலம் கொடுத்து இந்தியப் பாதுகாப்பு, எல்லைத் தகவல்களை சீனப் பெண் பெற்றுள்ளார். சர்மாவின் வீட்டிலிருந்து இந்தியப் பாதுகாப்புத் துறை தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளோம்.

கைது செய்யப்பட்ட சீனப் பெண்

கைது செய்யப்பட்ட சீனப் பெண், உதவியாளர் வீட்டிலிருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்து வந்தனர். சீனாவிலிருந்து வரும் பணத்தை இங்கிருக்கும் ஏஜெண்டுகள் மூலம் கொடுத்து மருந்துகளை வாங்கி அனுப்பி வந்துள்ளனர்.

பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, பாதுகாப்பு விஷயம் தொடர்பாக பல்வேறு இந்திய ஊடகங்களிலும், சீனாவின் 'தி குளோபல் டைம்ஸ்' நாளேட்டிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இவரைக் கடந்த 2016-ம் ஆண்டு சீனாவின் உளவுத்துறை அதிகாரிகள் அணுகியுள்ளார்கள். அதன்பின் சீன உளவுத்துறை அதிகாரிகளுடன் சர்மாவுக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நேபாள நாட்டவர்

இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ஒவ்வொரு தகவலுக்கும் ஆயிரம் அமெரிக்க டாலரை சீனாவிடம் இருந்து சர்மா பெற்றுள்ளார். அந்த வகையில் கடந்த ஒன்றரை ஆண்டில் ரூ.40 லட்சம் பெற்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த பாதுகாப்புத் துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களையும் கண்டுபிடித்தோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டுவரை இந்தியாவின் பல்வேறு பாதுகாப்புத் தகவல்ளை சீனாவுக்கு சர்மா தெரிவித்துள்ளார். சீன உளவுத்துறையினரும், சர்மாவும் பல்வேறு நாடுகளில் பல்வேறு நகரங்களில் சந்தித்துள்ளார்கள்''.

இவ்வாறு சஞ்சீவ் குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x