Published : 19 Sep 2020 02:53 PM
Last Updated : 19 Sep 2020 02:53 PM
மறைந்த முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது. ஆனால், மோடி அரசில் மசோதா குறித்து கூட்டணிக் கட்சிகளிடம் கலந்தாய்வுகூட செய்யவில்லை என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
வேளாண் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்து மக்களவையில் நிறைவேற்றியுள்ள 3 மசோதாக்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகாலி தளம் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து, அந்தக் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த ராஜினாமா கடிதத்தையும் ஏற்பதாக குடியரசுத் தலைவர் கூறிவிட்டார்.
இந்நிலையில் மசோதாக்களைக் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள மத்திய அரசு குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''மத்திய அரசு கொண்டுவந்து மக்களவையில் நிறைவேற்றியுள்ள வேளாண் தொடர்பான மசோதாக்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளிடம்கூட கலந்தாய்வு செய்யவில்லை.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டபோது, கூட்டணிக் கட்சிகளை மிகுந்த மதிப்புடன் நடத்தினார்கள். எந்த முக்கிய முடிவு எடுக்கும்போதும், ஆலோசித்தார்கள். இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பிணைப்பும், நம்பிக்கையும் இருந்தது.
மூத்த தலைவர் எல்.கே.அத்வானியும், வாஜ்பாயும் மிகவும் வித்தியாசமானவர்கள். எந்தவிதமான கொள்கை முடிவுகள் எடுக்கும்போதும் வாஜ்பாய், அத்வானி இருவரும் கூட்டணிக் கட்சிகளை அழைத்து ஆலோசிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். கூட்டணிக் கட்சிகள் அளிக்கும் ஆலோசனைக்கு மதிப்பளித்தார்கள், வார்த்தைக்கும் மதிப்பு இருந்தது.
ஆனால், மோடி அரசு கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துபேசாமல் கொண்டுவந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகாலி தளம் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் பாதல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த ராஜினாமா கடிதமும் ஏற்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணியிலிருந்து ஏற்கெனவே சிவசேனா கட்சி வெளியேறிவிட்டது. இப்போது அகாலி தளமும் வெளியேறப் போகிறது.
மகாராஷ்டிராவைப் போலவே பஞ்சாப் மாநிலமும் வேளாண் பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலம். ஆதலால், வேளாண் மசோதாக்களைக் கொண்டுவரும் முன், பாஜக அரசு கூட்டணிக் கட்சிகள், வேளாண் சங்கப் பிரதிநிதிகள், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்பட பல்வேறு மாநில வேளாண் வல்லுநர்களுடன் ஆலோசித்திருக்க வேண்டும்.
மத்திய அரசு தனியாமர்மயத்தை ஊக்கப்படுத்துகிறது. விமான நிலையங்கள் தனியார் மயம், ஏர் இந்தியா தனியார் மயம், ரயில்வே தனியார் மயம், காப்பீடு நிறுவனங்கள் தனியார் மயம், இப்போது விவசாயிகளின் வாழ்க்கையையும் வர்த்தகர்கள், பெரும் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கிறார்கள். மோடி அரசின் பொருளாதாரம், வர்த்தகம், வேளாண் சார்ந்த கொள்கைகள் அனைத்தும் சந்தேகமாக உள்ளன.
இந்தப் புதிய முறை விவசாயிகளுக்குப் பயன் அளிககும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இதையே உண்மை என நம்பினால், நாட்டில் முன்னணி விவசாயிகள் சங்கத்துடன், சங்கத் தலைவர்களுடன் மத்திய அரசு கலந்தாய்வு செய்வதில் என்ன கேடு வந்துவிடப்போகிறது?
குறைந்தபட்சம் தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவாரிடம் ஆலோசித்திருக்கலாம். ஆனால், மத்தியில் ஆளும் மோடி அரசு பேச்சுவார்த்தை, ஆலோசனை செய்யாது''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT