Published : 19 Sep 2020 01:44 PM
Last Updated : 19 Sep 2020 01:44 PM
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அகாலி தளம் கட்சி, இப்போதுள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது.
வேளாண் தொடர்பான 3 மசோதாக்களுக்கும் மாநிலங்களவைக்கு வந்தபின் அங்கு என்ன நிலைப்பாடு எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே பாஜக கூட்டணியில் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சிரோன்மணி அகாலி தளம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போதுள்ள நிலையில் விவசாயிகள் நலன்தான் முக்கியம், கூட்டணியிலிருந்து வெளியேறுவது பிரச்சினையில்லை என்று அகாலி தளம் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அகாலி தளம் எம்.பியும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் சார்பில் நேற்று அவசரக் கூட்டம் கூட்டி விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் குஜ்ரால் கூறுகையில், “திருமணத்தில்கூட சில கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்புதான். அதேபோலத்தான் கூட்டணிக்குள்ளும் இருக்கும். இரு தரப்புக்கும் கொள்கைகள், சித்தாந்தங்கள் வேறு. ஒவ்வொரு கட்சியும் தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பும்.
இந்த 3 மசோதாக்களையும் மத்திய அரசு தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அகாலி தளம் கட்சி உண்மையை மனதில் வைத்து செயல்படும் கட்சி. நம்முடைய ராணுவ வீரர் பஞ்சாப் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது, நாங்கள் எடுக்கும் நடவடிக்கையால் எல்லைப் பகுதியைத் தொந்தரவு செய்ய பாகிஸ்தான் முயலும். ஆதலால், பஞ்சாப் மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் வகையில் எந்த முடிவையும் எங்கள் கட்சி எடுக்காது.
ஆதலால், இப்போதுள்ள நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து அகாலி தளம் வெளியேறுவது குறித்து முடிவு எடுக்கவில்லை. மாநிலங்களவையில் இந்த 3 மசோதாக்களும் வரட்டும்.அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து முடிவு எடுப்போம்” எனத் தெரிவித்தார்
ஆனால், மாநிலங்களவையில் போதுமான பலம் இருப்பதால், 3 வேளாண் மசோதாக்களையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று பாஜக நம்பிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இந்த மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் இருக்க எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT