Published : 19 Sep 2020 01:17 PM
Last Updated : 19 Sep 2020 01:17 PM
கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக அதிகாரிகள் தங்களின் சொந்தப் பயன்பாட்டுக்காக தூதரகத்தைப் பயன்படுத்தி 18 ஆயிரம் கிலோ பேரிச்சம் பழங்கள், புனித குர்ஆன் நூல் ஆகியவற்றை இறக்குமதி செய்ததை கேரள அரசு பெற்றுக்கொண்டது தொடர்பாக கேரள அரசு மீது சுங்கத்துறை இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் சமீபத்தில் என்ஐஏ அதிகாரிகளாலும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளாலும் விசாரிக்கப்பட்டார். அப்போது, அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி ஐக்கிய அரசு அமீரகத் தூதரக அதிகாரிகளிடம் இருந்து மதநூல்களைப் பெற்றதாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சுங்கத்துறை பதிவு செய்துள்ளது.
சுங்கத்துறை சட்டத்தை மீறிய சில உயர் அதிகாரிகள், அரசியலில் முக்கியப் பதவியை வகித்து வரும் நபர்களிடம் சுங்கத்துறை விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ''கடந்த 2017-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக அதிகாரிகள் தங்களின் சொந்தப் பயன்பாட்டுக்காக 18 ஆயிரம் கிலோ பேரிச்சம் பழங்களை இறக்குமதி செய்ததை கேரள அரசில் உள்ள பல அதிகாரிகள் பெற்றுள்ளனர். அதேபோல, புனித குர்ஆன் நூலையும் இறக்குமதி செய்ததையும் கேரள அரசு பெற்றுக்கொண்டுள்ளது.
தூதரக அதிகாரிகள் தங்களின் சொந்தப் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்து, அதற்காக வரிச்சலுகை சான்றிதழைப் பெற்றுள்ள நிலையில் அதே மாநில அரசு அதிகாரிகள் பெற்றுக்கொண்டது முழுமையாக சங்கத்துறை சட்டத்துக்கு எதிரானதாகும்.
வெளிநாட்டு அரசுகளிடம் இருந்து எந்தப் பொருட்களைப் பெறுவதற்கும் தடை இருக்கிறது என்று மாநில அரசு அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.
ஐக்கிய அரபு அமீரகத் தூதரக அதிகாரிகள் சில பொருட்களைத் தங்களின் சொந்தப் பயன்பாட்டுக்காக தங்கள் நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளார்கள். அந்தப் பொருட்களைக் கேரள அரசு பெற்று பல்வேறு இடங்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளது.
ஆதலால் கேரள அரசின் இந்தச் செயல் சுங்கத்துறைச் சட்டம், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் அந்நிய நாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிரானதாகும். கேரள அரசில் முக்கியமான அதிகாரமிக்க பதவியில் இருக்கும் சிலர் இந்தப் பொருட்களைப் பரிசாகப் பெற்று, பல்வேறு இடங்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளார்கள்” எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.ராஜீவி கூறுகையில், “ வெளிநாடுகளில் இருந்து மதம் சம்பந்தமான நூல்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், அதற்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டியது சுங்கத்துறையின் பணி. சுங்கத்துறையின் விதிப்படி, தூதரக அதிகாரிகள் இறக்குமதி செய்த பொருட்களுக்கு வரிச்சலுகையைச் சுங்கத்துறையினர்தான் அளித்துள்ளார்கள்.
சுங்கத்துறையினர்தான் வரிவிலக்கு சான்றிதழ்களை அளித்து, கையொப்பமிட்டுள்ளார்கள். இதை மாநில அரசு சரிபார்க்க மட்டுமே முடியுமே தவிர மாநில அரசு வரம்புக்குள் வராது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT