Published : 18 Sep 2020 04:21 PM
Last Updated : 18 Sep 2020 04:21 PM
மத்திய அரசு கொண்டு வரும் வேளாண் தொடர்பான 3 மசோதாக்களையும், பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து மாநிலங்களவையில் கூட்டாக எதிர்க்க வேண்டும், நாம் எதிர்க்காவிட்டால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முதாலாளிகள் கரங்களில் விவசாயிகள் விழுந்து, சுரண்டப்படுவார்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.
அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் நேற்று ராஜினாமா செய்து கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இந்த மசோதாவுக்கு எதிராக பாஜக அல்லாத கட்சிகள் ஒன்று திரள வேண்டும் என்று ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது “ மத்திய அரசு கொண்டு வேளான் தொடர்பான மசோதா மூலம் விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகள் கரங்களில் ஒப்படைக்க அரசு முயல்கிறது.
நான் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால், பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து மாநிலங்களவையில் ஒன்றாக இணைந்து இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும். அனைத்து எம்.பி.க்களையும் அங்கு வரவழைக்க வேண்டும்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபடாமல், வெளிநடப்பு செய்யாமல் இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் உங்களைக் கவனித்து வருகிறார்கள் “ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT