Published : 18 Sep 2020 04:04 PM
Last Updated : 18 Sep 2020 04:04 PM

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம்: தமிழகத்தில் செப்டம்பர் வரை ரூ 3,712 கோடி செலவு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு 2020-21- இல் (2020 செப்டம்பர் 9 வரை) ரூ 3,712 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

பெண்கள், மாணவர்கள் மற்றும் அங்கன் வாடிபணியாளர்களின் நலன் குறித்த முக்கிய அறிவிப்புகள்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியதாவது:

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2018-19-இல் 233,983 பேரும், 2019-20-இல் 421,108 பேரும், 2020-21- இல் (2020 செப்டம்பர் 9 வரை) 1,87,390 பேரும் பதிவு செய்தனர்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2018-19-இல் ரூ 4,179 கோடியும், 2019-20-இல் ரூ 14,394 கோடியும், 2020-21- இல் (2020 செப்டம்பர் 9 வரை) ரூ 3,712 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

தேசிய சட்டப் பணிகள் ஆணையம் அளித்துள்ள தகவலின் படி, 2878 குடும்ப வன்முறை வழக்குகளில் சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைக் காத்தல் சட்டம் 2005-இன் கீழ் 452 வழக்குகளில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 694 வழக்குகள் ஆலோசனை மற்றும் மத்தியஸ்தம் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

பொது முடக்கத்தின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கட்டணமில்லா உதவி எண் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் அரசின் சார்பாக எடுக்கப்பட்டன.

பொது முடக்கத்தின் போது மாணவர்கள் பசி இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் உணவு பாதுகாப்பு நிதி வழங்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டன.

2018 அக்டோபர் 1 முதல், அங்கன்வாடி பணியாளர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பூதியம் ரூபாய் 3,000-த்தில் இருந்து 4,500 ஆக அரசு உயர்த்தியது. அங்கன்வாடி உதவியாளர்கள் உட்பட இதர பணியாளர்களின் மதிப்பூதியமும் உயர்த்தப்பட்டது.

தற்போது கோவிட்-19 தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடுதலாக மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. இது தவிர, ரூபாய் 50 லட்சம் காப்பீட்டு திட்டத்திலும் இவர்கள் இணைத்து கொள்ளப் படுகிறார்கள்.

ஊட்டச்சத்தின்மை குழந்தைகளின் இறப்புக்கு நேரடி காரணமாக இல்லாத போதும், தொற்றுக்கான எதிர்ப்பு சக்தியை குறைத்து இறப்பு சாத்தியங்களை அதிகப்படுத்துகிறது. எனவே, ஊட்டச்சத்தின்மையை கலைவதற்கு உயர் முக்கியத்துவத்தை அரசு அளிக்கிறது.

ஊட்டச்சத்து திட்டத்தை 2017 டிசம்பர் 18 அன்று தொடங்கிய அரசு, பெண் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களின் உடல் நலன் மீது கவனம் செலுத்தி வருகிறது.

குழந்தைகள் உதவி எண்ணில் கடந்த 3 ஆண்டுகளில் 2,39,70,624 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. 2018-இல் 1,12,87,677 அழைப்புகளும், 2019-இல் 78,64,669 அழைப்புகளும், 2020 ஆகஸ்ட் வரை 48,18,278 அழைப்புகளும் பெறப்பட்டுள்ளன.

594 மாவட்டங்களில் குழந்தைகள் உதவி எண் உள்ள நிலையில், ஒரு அழைப்பு கிடைத்தவுடன் 60 நிமிடங்களில் அந்த இடத்துக்கு அதிகாரிகள் செல்ல வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன.

பொது முடக்கத்தின்போது குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏதுமில்லை என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், பாதுகாப்புக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

கோவிட்-19 பொது முடக்கத்தின்போது நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன. எனினும் இந்த மையங்களினால் பயன்பெறுவோர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அங்கன்வாடி பணியாளர்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x