Published : 18 Sep 2020 12:09 PM
Last Updated : 18 Sep 2020 12:09 PM
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து விரைவில் கட்சி கூடி முடிவு செய்யும் என்று சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் அதிருப்தி தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மத்தியில் அமைந்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்த மசோதாக்களுக்கு எதிராக மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் எம்.பி சுக்பிர்சிங் பாதல், அவரின் மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் எதிராக வாக்களித்து, நேற்று அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் நேற்று ராஜினாமா செய்து கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயிகளுக்காகவும் எங்கள் கட்சி எந்தவிதமான தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து கட்சியின் அவசரக் கூட்டம் கூட்டி விரைவில் முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் அளி்த்த பேட்டியில், “விவசாயிகளின் கோரிக்கைகளையும், கவலைகளையும், வலிகளையும் புரிந்து கொள்ளாமல், அதைத் தீர்க்காமல் வேளாண் மசோதாக்களைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அரசில் இனிமேலும் அமைச்சராகத் தொடர விரும்பில்லை என்பதால் ராஜினாமா செய்துவிட்டேன்” எனத் தெரிவத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT