Published : 18 Sep 2020 07:55 AM
Last Updated : 18 Sep 2020 07:55 AM
தேர்தல் பணியின்போது இறந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவரின் மனைவிக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் ஆணையம் இழப்பீடு வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2002-ல் நடந்த தேர்தலின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த ரமேஷ் குமார் என்ற சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார். அப்போது அவரது மனைவி பிரமிளா தேவி, தேர்தல் ஆணையம் சார்பில் தனக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை உடனே வழங்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால் தொடர் நினைவூட்டல் கடிதங்களுக்கு பிறகு இதனைப் பெற 18 ஆண்டுகள் ஆகும் என அவர் ஒருபோதும் நினைக்கவில்லை.
பிரமிளா தேவி கடந்த ஆக.10-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “ஜம்மு காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரி தனது நினைவூட்டல் கடிதங்களுக்கு கடந்த 18 ஆண்டுகளாக பதில்அளிக்கவில்லை” என்று கூறி யிருந்தார்.
இந்நிலையில் 2002-ல் பிரமிளா தேவிக்கு வழங்கப்பட வேண்டிய தொகை ரூ.5 லட்சம்தான் என்றாலும் இப்பிரச்சினையின் தன்மை கருதி அவருக்கு ரூ.20 லட்சம் வழங்க தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உத்தரவிட்டார். (தேர்தல் பணியில் இறக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தேர்தல் ஆணையம் தற்போது ரூ.10 லட்சம் வழங்குகிறது).
மேலும் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பிரமிளா தேவிக்கு சுனில் அரோரா அனுப்பிய மின்னஞ்சலில், அவரது கணவரின் தியாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இழப்பீடு தாமதம் ஆனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
மேலும் இதுபோன்று வேறு யாருக்கேனும் இழப்பீடு நிலுவையில் உள்ளதா என ஆராயும்படி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிக்கும் அவர் கடிதம் எழுதினார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையஅதிகாரிகள் கூறும்போது, “தலைமை தேர்தல் ஆணையரின் உத்தரவுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் இருவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட் டுள்ளது. இதுபோன்ற இழப்பீடுவெகு விரைவில் வழங்கப்படு வதை உறுதி செய்யும் வகையில்விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்து வருகிறது. வீரர் ஒருவர் பணியில் உயிரிழக்க நேரிட்டால் அவரது அடுத்த உறவினரின் வங்கிக் கணக்கு கிடைத்தால், தேர்தல் ஆணையமே நேரடியாக அந்தக் கணக்கில் பணத்தை செலுத்தும் வகையில் விதிமுறை வகுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
முன்னாள் தலைமை தேர்தல்ஆணையர் எஸ்.ஒய்.குரேஷிகூறும்போது, “இதுபோன்ற இழப்பீடு மிகவும் உணர்வுபூர்வமானது என்பதால் உடனுக்குடன் வழங்கப்பட்டுவிடும். மிக அரிதாகவே கால தாமதம் ஏற்படும். சம்பளம் மற்றும் பிற சலுகைகள் தற்போது வங்கிக் கணக்கு மூலம்வழங்கப்படுவதால் இழப்பீட்டையும் வங்கிக் கணக்கில் செலுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT