Published : 18 Sep 2020 06:52 AM
Last Updated : 18 Sep 2020 06:52 AM
இந்தி தொலைக்காட்சியான சுதர்ஷன் டி.வி. தொகுப்பாளர் சுரேஷ் சாவ்காங்கே தொகுத்து வழங்கிய ''பிந்தாஸ் போல்'' என்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடியாட்சிப் பணிகளில் இஸ்லாமியர்கள் முறைகேடு செய்கின்றனர். ஆட்சிப் பணிகளை பிடிக்க இவர்கள் ஜிஹாத் (புனிதப் போர்) செய்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார். அதோடு இஸ்லாமியர்களை மோசமாக விமர்சித்தும், இஸ்லாமிய ஆட்சி பணி அதிகாரிகளை இழிவாக பேசியும் இருந்தார்.
சர்ச்சை பெரிதானதால் சுதர்ஷன் டிவி சேனலில் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், கே.எம்.ஜோசப், இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பத்திரிகை பணிகள் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் பிரச்சினை ஏற்கெனவே சட்டரீதியான விதிகள் மற்றும் தீர்ப்புகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மின்னணு ஊடகங்களை நிர்வகிக்க தகுந்த வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், எலக்ட்ரானிக் மீடியாக்களில் வெளியாகும் ஒரு செய்தியானது வாட்ஸ்-அப், பேஸ்புக் செயலிகளில் செல்வது போல வெகு வேகமாக மக்களைச் சென்றடைகிறது. அதன் விளைவும், பாதிப்பும் அதிகமாக உள்ளது. எனவே, அதன் மூலம் வெளியாகும் செய்திகள் காட்டூத்தீ போல உடனடியாக பரவி விடும்.
எனவே எலக்ட்ரானிக் மீடியாக்களுக்காக தனியாக நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்க வேண்டும். இந்த நெறிமுறைகளை உருவாக்க நீதிமன்றத்துக்கு உதவும் மத்தியஸ்தரையோ அல்லது ஒரு வழிகாட்டு குழுவையோ அமைக்க வேண்டும். இந்தக் குழுக்கள் மூலம் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம்.
இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT