Published : 17 Sep 2020 10:30 PM
Last Updated : 17 Sep 2020 10:30 PM
மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்துவதாக மக்களவையில் திமுக புகார் தெரிவித்தது. இதை அக்கட்சியின் தர்மபுரி தொகுதி எம்.பி.யான செந்தில்குமார், கூட்டுறவு வங்கிகள் மீதான மசோதாவின் உரையில் குறிப்பிட்டார்.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின்கீழ் கொண்டு வரும் மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி செந்தில்குமா பேசியதாவது:
மசோதாவை அறிமுகம் செய்த நிதி அமைச்சர் கூட்டுறவு வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதால் அவற்றை கண்காணிக்கும் முடிவுக்கான மசோதாவை கொண்டுவந்ததாகக் கூறினார்.
தமிழ்நாட்டில் 128 வங்கிகள் லாபகரமாக இயங்குகின்றன. இவற்றின் சராசரி சேமிப்பு ரூபாய் ஏழாயிரம் கோடி வரை திரட்டியுள்ளன. ஒன்பது கூட்டுறவு வங்கிகள் மட்டுமே நஷ்டத்தை சந்தித்துள்ளன.
அதற்கும் காரணம் இயற்கை பேரிடரால் விவசாயிகள் கடனை திரும்ப செலுத்தாததுதான் காரணம். தென் மாநிலங்களில் குறிப்பாக தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டுறவு வங்கிகள் லாபகரமாக செயல்படுகின்றன.
அதிலும் தமிழகம், புதுவையில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. தமிழகம் பல்வேறு துறைகளில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. குறிப்பாக கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு உள்ளிட்டவற்றில் திராவிட கட்சி சித்தாந்தம் மிகச் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.
எந்த ஒரு திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்த அதை திராவிட கட்சி செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இந்த முறையில் செயல்படுத்தினால் நிச்சயம் எந்த திட்டங்களிலும் வெற்றியை பெறலாம்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் முதல்வராக கருணாநிதி இருந்த சமயத்தில் விவசாயக் கடன் ரூபாய் ஏழாயிரம் கோடிதள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல மகளிர் மேம்பாட்டுக்கு என முதலில் பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியில் தான் மகளிர் சுயஉதவிக் குழு உருவாக்கப்பட்டது.
இது, இன்று நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் மிகச் சிறப்பான வகையில் செயல்படுகிறது. மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளைப் பறிப்பதிலேயே இந்த அரசு கவனம் செலுத்துகிறது.
இதற்கு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையும் ஒரு சாட்சி.
1965 ஆம் ஆண்டின் வங்கிகள் சட்டத்தில் கூட்டுறவு வங்கிகளுக்கான அதிகாரங்களை தீர்மானிப்பது அந்தந்த மாநிலங்களின் பொறுப்பு என்பதாகும்.
இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. ரிசர்வ் வங்கிக்கு ஏற்கனவே உள்ள பணிச்சுமையில் கூட்டுறவு வங்கிகளைக் கண்காணிப்பது பெரும் சுமையாகத்தான் இருக்கும்.
பொதுத்துறை வங்கிகளில் பெருமளவு கடன் பெற்று நாட்டை விட்டு விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் நாட்டை விட்டெ ஓடிப் போய் விட்டனர். இந்த வங்கிகள் முறையாக செயல்பட்டிருந்தால் அவர்ளிடமிருந்து கடனை வசூலித்திருக்க முடியும்.
வங்கிகளின் செயலற்ற தன்மை, பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளைக் கண்காணிப்பது நிச்சயம் ரிசர்வ் வங்கிக்கு சுமையாகத்தான் இருக்கும்.
சமீபத்தில் யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றவர்களில் 129 பேர் சங்கல்ப் என்ற அறக்கட்டளையிலிருந்து வந்தவர்கள். இந்த அறக்கட்டளையானது ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையது. இத்தகைய அதிகாரிகள் சுயமாக நடந்து கொள்வார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
நாடு இப்போது கரோனா வடிவில் மிகப் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. இதனால், 50 லட்சமாக உள்ள பாதிப்பு இந்தக் கூட்டத்தொடர் முடியும்போது 65 லட்சத்தை நிச்சயம் தொடும்.
அதை சமாளிக்கும் அளவுக்கு போதிய வசதிகளை நாம் அதிகரித்துக்கொள்ளவில்லை. இதுபோன்ற சூழலில் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில்கொண்டுவரும் மசோதாவை நாம் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT