Published : 17 Sep 2020 08:31 PM
Last Updated : 17 Sep 2020 08:31 PM
கோவிட் தொற்றுக்கு மத்தியில் விமான போக்குவரத்து துறையை மீட்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மக்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
கோவிட் தொற்றுக்கு மத்தியில் விமான போக்குவரத்து துறையை மீட்க பல நடவடிக்கைகளை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மேற்கொண்டது.
கோவிட் தொற்று காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்து படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 33% விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டன. கடந்த ஜூன் மாதம் 45% விமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. செப்டம்பரில் 60% விமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
கோவிட் தொற்று காரணமாக வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, கத்தார், மாலத்தீவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் விமான போக்குவரத்தை தொடங்க தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் மூலம் இந்த ஒப்பந்தங்களை செய்து கொண்ட இரு நாடுகளும் பயன் அடைய முடிந்தது.
வந்தே பாரத் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பயணிகள் அழைத்து வரப்பட்டபோது, அவர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை மாநில அரசுகள் செய்து கொடுத்தன.
தற்போதுள்ள மற்றும் புதிய விமான நிலையங்களில் தனியார் துறை முதலீடு ஊக்குவிக்கப்பட்டது.
சர்வதேச சரக்கு போக்குவரத்தில், இந்திய விமான நிறுவனங்களின் பங்கு ஊக்குவிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களின் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிவில் போக்குவரத்து துறை இயக்குனரகம் மேற்கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT