Last Updated : 17 Sep, 2020 02:18 PM

1  

Published : 17 Sep 2020 02:18 PM
Last Updated : 17 Sep 2020 02:18 PM

கைதட்டுதல், பாத்திரத்தில் ஒலி எழுப்பினால் கரோனா ஒழியும் என ஆய்வில் சொல்லப்பட்டதா?-மாநிலங்களவையில் ஆம் ஆத்மி, பாஜக இடையே வாக்குவாதம்

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்: கோப்புப்படம்

புதுடெல்லி

கைதட்டினால், பாத்திரங்களில் ஒலி எழுப்பினால் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்று ஏதாவது ஆய்வுகளில் சொல்லப்பட்டு இருக்கிறதா? இவை முட்டாள்தனமான செயல்கள் என்று மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் காட்டமாகப் பேசினார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது. அப்போது ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் பேசினார்.

''கடந்த மார்ச் மாதம் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் முன்களத்தில் போராடும் மருத்துவர்களைக் கவுரவிக்கும் வகையில் கைதட்டவும், பாத்திரங்களில் ஒலி எழுப்பியும் உற்சாகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

நான் கேட்கிறேன். உலகில் ஏதாவது ஒரு ஆய்விலாவது, கைதட்டுவதாலும், பாத்திரங்கள், சாப்பாட்டுத் தட்டுகளில் ஒலி எழுப்புவதாலும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்று கூறுங்கள். ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் வீட்டுக்குச் செல்கிறோம். பிரதமர் மோடியுடன் சேர்ந்து கை தட்டுகிறோம். நாடாளுமன்றத்தின் வளாகத்தில் விளக்கு ஏற்றுங்கள்.

இதுபோன்ற அபத்தமான, முட்டாள்தானமான சிந்தனைகளைக் கொண்டு வந்து உங்களால்தான் ஒட்டுமொத்த தேசமும் முட்டாளாகட்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்” என சஞ்சய் சிங் குற்றம் சாட்டினார்.

இதற்கு பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி பதிலடி கொடுத்துப் பேசுகையில், “கரோனா வைரஸ் பரவல் காலத்தில் தீபங்களை ஏற்றுவதும், பாத்திரங்கள், தட்டுகளில் ஒலி எழுப்புவதன் அடையாளம் கரோனாவுக்கு எதிராகப் போராடுகிறோம் என்பதுதான்.

மகாத்மா காந்தியடிகள், தனது நூல் நூற்றும் ராட்டையை அடையாளமாக வைத்து, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டினாரே. ஆங்கிலேயர்களுக்கு எதிராக தேசத்தின் மக்களை ஒன்று திரட்ட ராட்டையை அடையாளமாக மகாத்மா காந்தி பயன்படுத்தினார். அதே வழியில்தான் பிரதமர் மோடி விளக்குகளை வீட்டில் ஏற்றக்கூறினார், பாத்திரங்களில் ஒலி எழுப்பக்கூறி அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி, கரோனாவுக்கு எதிராக இருக்கிறோம் என்று அடையாளப்படுத்தினார்.

கரோனா குறித்து முன்கூட்டியே எச்சரித்த தலைவர் என்று சொல்லக்கூடியவர், காங்கிரஸ் கட்சி சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தடை செய்யக் கோரியபோது அந்தத் தலைவர் நாட்டிலேயே இல்லை (ராகுல் காந்தி)” எனத் தெரிவித்தார்.

அதற்கு ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் பதில் அளிக்கையில், “லாக்டவுனை பாஜக அரசு முன்கூட்டியே அமல்படுத்தவில்லை. பாஜக அப்போது மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதில் தீவிரமாக இருந்தது. அந்த நேரத்தில் நாட்டில் 29 பேர் மட்டும் கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் கூட கரோனாவில் பாதிக்கப்படவில்லை” எனத் தெரிவி்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x