Last Updated : 17 Sep, 2020 11:16 AM

 

Published : 17 Sep 2020 11:16 AM
Last Updated : 17 Sep 2020 11:16 AM

'தேசத்துக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் அர்ப்பணித்தவர்': பிரதமர் மோடிக்கு அமித் ஷா, ராகுல் காந்தி  பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம்

புதுடெல்லி

நாட்டுக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் தேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பிரதமர் மோடிக்கு 70-வது பிறந்தநாள் வாழ்த்துகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு இன்று 70-வது பிறந்தநாளாகும். இதையடுத்து, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாஜக சார்பில் மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதிலும் செப்டம்பர் 14 முதல் 20-ம் தேதி வரை சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்றவற்றுக்கு பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமி்த் ஷா ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “நாட்டுக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் தேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மோடியின் வடிவத்தில், தாழ்த்தப்பட்ட மக்களை வளர்ச்சியின் பிரதான நீரோட்டத்துடன் இணைத்து, வலுவான இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்த ஒரு தலைவரை நாடு பெற்றுள்ளது.

நீண்டகாலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழும் நாட்டின் ஏழை மக்களுக்கு வீடுகள், மின்சாரம், வங்கிக்கணக்கு, கழிவறை, ஏழை தாய்மார்களுக்கு உஜ்வாலாத் திட்டத்தின் கீழ் இலவச சமையஸ் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டன.

மதிப்புக்குரிய வாழ்க்கையை சமூகத்தில் வாழவே இவை வழங்கப்பட்டன.
பிரதமரின் தீர்க்கமான உறுதியும், வலுவான விருப்பமும் காரணமாக மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகியுள்ளன.

ஒரு வலுவான, பாதுகாப்பான, தற்சார்பு இந்தியாவை உருவாக்க தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் செலவழிக்கும் ஒரு சிறந்த தலைவர் நரேந்திர மோடி தலைமையில் பாரத மாதாவுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பது ஒரு பாக்கியம்.

நானும், கோடிக்கணக்கான மக்களுடன் சேர்ந்து, பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்டகாலம் வாழவும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துப் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “ பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “ பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இந்தியாவின் மதிப்புக்குரிய அம்சங்களையும், ஜனநாயகப் பாரம்பரியங்களையும் காப்பாற்றுவதில் உறுதிபூண்டுள்ளீர்கள். உங்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கும், மகிழ்ச்சிக்கும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்களின் மதிப்புக்குரிய சேவை நாட்டுக்குத் தேவை” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x