Published : 16 Sep 2020 08:24 PM
Last Updated : 16 Sep 2020 08:24 PM
நாடாளுமன்றத்தில் இன்று கரோனா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு திமுக எம்.பி.யான திருச்சி சிவா பேசினார். மாநிலங்களவையில் அவரது உரையை விரைந்து முடிக்கக் கூறியதால் இதில் சிவா கடும் கோபம் காட்டி இருந்தார்.
மழைக்காலக் கூட்டத்தொடரில் திருச்சி சிவா எம்.பி .கரோனோ மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரது உரையை விரைந்து முடிக்கும்படி அவையில் இருந்த துணைத்தலைவர் ஹரிவன்ஸ் கேட்டுக் கொண்டார்.
மொத்தமுள்ள நான்கு மணிநேரத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்க வேண்டும் எனவும் துணைத்தலைவர் குறிப்பிட்டார்.இதற்கு எம்.பி சிவா, கரோனோ மீது பேசவும் தடுக்கப்படுவதாகக் கோபப்பட்டார்.
இதுகுறித்து எம்.பி சிவா கூறும்போது, ‘இதுபோல் குறிப்பிட்ட எல்லைக்குள் என்றால் இங்கு பேசுவதில் அர்த்தம் இல்லை. 11 அவசர சட்டங்களும், 4 மசோதாக்கள் இருப்பது அறிந்ததே.’ எனத் தெரிவித்தார்.
பிறகு தனது உரையை எம்.பி சிவா தொடர்ந்தார். இதையடுத்து மூன்றாவது முறையாக உரையை முடிக்க சிவாவிடம் துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
இதன் பிறகும் அனுமதி பெற்று உரையை தொடர்ந்த எம்.பி சிவா கூறும்போது, ‘நாம் எதற்காக இங்கு அமர்ந்துள்ளோம். இனி இங்கு வருவதில் எந்த அர்த்தமும் இல்லை என எண்ணுகிறேன்.
எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதிக்கப்படுவது இல்லை. இதுபோல் மிக,மிக முக்கியமான விவாதத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.’ எனத் தெரிவித்தார்.
தனது உரையில் போது ஒவ்வொரு முறை துணைத்தலைவர் முடிக்க கோரிய போதும் எம்.பி சிவா, கோபத்துடன் ஆவேசப்பட்டார். இதை கண்டு மாநிலங்களவையின் மற்ற உறுப்பினர்கள் ஆச்சரியப்பட்டதுடன் அவரை பேச அனுமதிக்கும்படியும் சில கட்சியினர் குரல் கொடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT