Last Updated : 16 Sep, 2020 08:00 PM

2  

Published : 16 Sep 2020 08:00 PM
Last Updated : 16 Sep 2020 08:00 PM

ட்ரம்ப் நிகழ்ச்சிக்காக ஊரடங்கு ஒத்திவைப்பு; கரோனாவில் தடுப்பு நடவடிக்கை இல்லை: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

கோப்புப் படம்

புதுடெல்லி

அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்பின் குஜராத் நிகழ்ச்சிக்காக ஊரடங்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும், கரோனா பரவல் தடுப்பில் நடவடிக்கை இல்லை எனவும் மாநிலங்களவையில் திமுக சராமரியாக குற்றம் சுமத்தியது. இதை அக்கட்சியின் எம்.பி.யான திருச்சி சிவா இன்று மத்திய அரசு மீது எழுப்பினார்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷவர்தன் இன்று மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விவாதத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி பேசினார்.

தனது உரையில் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா கூறியதாவது:

‘‘டெல்லி சட்டப்பேரவையின் நேற்றைய நடவடிக்கைகளில் கலந்துகொண்டிருந்த 2 எம்எல்ஏக்களுக்கு தொற்று என அறிக்கை வெளியானது. இது, நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் நமது போராட்டத்தின் போது எங்கள் திமுக எம்.பி ஜி.செல்வத்திற்கும் இருப்பது தெரிந்தது.

இந்த சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த தொற்றில் பலியாகுபவர்களது நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பிரச்சனைகளை விவாதித்து அதற்கான முடிவு காண்பதே நாடாளுமன்றம்.

எனவே, அனைத்து பிரச்சனைகளும் இரண்டாம் பட்சமாகக் கருதி இதை இங்கு விவாதிக்க வேண்டும். உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் இதற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

பலியான 82,000 உயிர்களால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் மீதான உணர்வுகளை அழுது வெளிப்படுத்தக்கூட அவர்களால் முடிவதில்லை.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மிகத் தைரியமாக அரசு முடிவு எடுத்ததாக மத்திய அமைச்சர் மிகவும் பெருமையுடன் அறிக்கை அளித்தார். அதில் அவர், தேசிய அளவிலான ஊரடங்கு பிரதமரால் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த ஊரடங்கு மார்ச் 23 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதன் முதல் தொற்று ஜனவரி 2020 இல் வெளியானது. அப்போது வரை நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்?

நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்துக்களும் நடைபெற்றன. சாலைகள் மற்றும் சந்தைகளில் பொதுமக்கள் வழக்கம் போல் நடமாடினர்.

எனவே, உங்களுக்கு இதில் முன்கூட்டிய திட்டங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. மார்ச் 22 இல் நான் சென்னையில் இருந்தேன். அப்போது இரண்டு அமைச்சர்களிடம் இருந்து எனக்கு போன் வந்தது.

அதில் நான் உடனடியாக டெல்லி வரவேண்டும் எனக் கூறப்பட்டது. சூழல் சரியாக இல்லை என நான் தெரிவித்ததற்கு, ‘அப்படி ஒன்றுமில்லை வரலாம்’ என அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், மறுநாளே ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதுபோல், தாமதமாக மார்ச் 23 இல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பு நிகழ்ச்சி. இதற்காக நீங்கள் குஜராத்தில் மாபெரும் ஏற்பாடுகள் செய்துள்ளீர்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து தள்ளி போட்டபடி அரசு இருந்தது. அந்நிகழ்ச்சியின் மீது தான் அக்கறை இருந்ததே தவிர அது பொதுமக்கள் வாழ்க்கை மீது இல்லை.

இந்த விவகாரத்தில் கடவுளுக்கு நன்றி. லண்டனில் இருந்து லக்னோ வந்த ஒரு பாடகரின் நிகழ்ச்சியில் சில விஐபிக்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சூழல் மீதான விழிப்புணர்வு பெற்ற அரசு ஊரடங்கு அறிவித்தது.

மிகவும் கடுமையான ஊரடங்கு இந்தியாவில் இருந்தது. நிதித்தூண்டுதல் மிகவும் குறைவாக இருந்தது, மிகவும் அதிகமான ஜிடிபி இந்தியாவில் பாதிக்கப்பட்டது.

இந்த கடுமையான ஊரடங்கின் பலன் என்ன? இதனால், உலகின் எந்த நாடும் இல்லாதவகையில் இந்தியா மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் கரோனா சிகிச்சை ஒரு மில்லியனுக்கு 720 பேருக்கு மட்டும் செய்யப்பட்டுள்ளது.

இது, அமெரிக்கா 21 மடங்கும், இந்தாலியில் 25 மடங்காக உள்ளது. இந்தியா பாதிக்கப்பட்டோர் குறைவாக இருக்க வேண்டி அதன் எண்ணிக்கையை குறைத்து காட்டியுள்ளீர். இங்கு கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் பரவும் கரோனாவை தடுப்பதில் நடவடிக்கை இல்லை.

இவ்விவகாரத்தில் அரசு மருத்துவம் மற்றும் முதல்நிலை பணியாளர்களின் மீதும் அக்கறை கொள்வதில்லை. இதன் ஒரு சிகிச்சையான பிளாஸ்மா தெரபியின் நிலை என்ன? இதன் மீதான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.’’ என அவர் தெரிவித்தார்.

கரோனாவில் இந்தி திணிப்பா?

தனது உரையின் இறுதியில் எம்.பி சிவா, கரோனா பரவல் சூழலில் அரசு இந்தி திணிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினார். இதற்காக அவர் ஆயுஷ் அமைச்சகத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற இணையதளக் கூட்டத்தை சுட்டிக் காட்டினார்.

இதன் மீது எம்.பி சிவா கூறும்போது, ‘‘ஆயுஷ் மருத்துவர்கள் நம் நாட்டில் 86,080 உள்ளனர். இவர்களில் இந்தி மொழி அறியாதவர்கள் பலரும் உள்ளனர்.

ஆனால், இவர்கள் அக்கூட்டத்தில் இந்தி புரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டனர். இதற்கு அவர்களை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்படுகிறது.’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x