Last Updated : 16 Sep, 2020 09:21 AM

1  

Published : 16 Sep 2020 09:21 AM
Last Updated : 16 Sep 2020 09:21 AM

64 மருத்துவர்கள் உள்பட 155 சுகாதாரப் பணியாளர்கள் கரோனாவால் உயிரிழப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

இம்மாதம் 11-ம் தேதிவரை கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் 64 மருத்துவர்கள் உள்பட 155 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குறித்து மத்திய அரசு அதிகாரபூர்வமாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இது தொடர்பாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பும் அவ்வப்போது அறிக்கையும் வெளியிட்டு வந்தது.

இந்தச் சூழலில் கரோனாவில் முன் களத்தில் போராடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்த விவரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் அஸ்வின் சவுபே எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

“கடந்த 11-ம் தேதி வரை கரோனாவுக்கு எதிராக முன்களத்தில் போராடும் மருத்துவப் பணியாளர்களில் 64 மருத்துவர்கள் உள்பட 155 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவம் என்பது மாநில அரசுகள் தொடர்புடையது என்பதால், மத்திய அரசு இது தொடர்பாக முழுமையான புள்ளிவிவரங்களைப் பராமரிக்கவில்லை. ஆனால், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நிவாரணம் கோரியவர்கள் குறித்து தேசிய அளவில் புள்ளிவிவரங்கள் பராமரிக்கப்படுகின்றன.

அதன்படி செப்டம்பர் 11-ம் தேதிவரை 155 மருத்துவப் பணியாளர்கள் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 6 மருத்துவர்கள், குஜராத், மேற்கு வங்கத்தில் 14 மருத்துவர்கள், அருணாச்சலப் பிரதேசத்தில் 12 மருத்துவர்கள், தமிழகத்தில் 10 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

கரோனா நோய்த்தடுப்பு மற்றும் பணியில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மருத்துவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. மார்ச் 20-ம் தேதிக்குள்ளாகவோ மாவட்ட அளவில் அனைத்துப் பணியாளர்களுக்கும் பயிற்சியை முடிக்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து வகையான சுகாதாரப் பணியாளர்களுக்கும் தேவையான பயிற்சி முறைகள் மத்திய அரசின் ஐஜிஓடி தளத்தில் இருக்கிறது.

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதில் உள்ள அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்களையும், அவர்களின் செயல்பாடுகள், உடல்நலன் ஆகியவற்றை ஆய்வு செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதிகமான நோய்த்தொற்று இருப்போருக்கு ஒருவாரம் வரை தனிமைப்படுத்துதலும், அவர்களின் உடல்நலன், பணியாற்றிய இடம், நோயாளிகளுடன் தொடர்பு ஆகியவற்றை வைத்து கூடுதலாக ஒருவாரம் வரை தனிமைப்படுத்த அதற்குரிய அதிகாரிகள் முடிவு எடுக்கலாம். இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் கடந்த ஜூன் 18-ம் தேதி வழங்கப்பட்டுள்ளன.

கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களைக் கையாளும்போது பிபிஇ ஆடை அணிதல் கட்டாயம் என்பது கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளும் தடுப்பு மருந்தாக வழங்கப்படுகிறது.

என்95 முகக்கவசம், மற்ற முகக்கவசங்கள் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலம் வரை பிபிஇ ஆடைகள், முகக்கவசம், முகக்கண்ணாடி போன்றவற்றின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது.

கோவிட்-19 அவசர நிதி மற்றும் தயாரிப்புப் பணிக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. மாநிலங்களுக்குத் தேவையான 9.81 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்பட்டன, 28,476 வென்டிலேட்டர்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன’’.

இவ்வாறு அஸ்வின் சவுபே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x