Published : 16 Sep 2020 08:49 AM
Last Updated : 16 Sep 2020 08:49 AM
கரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் போரிடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சத்துக்கான காப்பீட்டை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்தக் காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 61 பேருக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், 156 பேருக்கான காப்பீடு விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், 67 விண்ணப்பங்கள் இன்னும் மாநில அரசுகளால் தாக்கல் செய்யவில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா காலத்தில் முன்களத்தில் மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யும், மருத்துவர்கள், சுகாாதாரப் பணியாளர்களுக்காக ரூ.50 லட்சம் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டம் மூலம் கொண்டு வந்தது.
இதன்படி கரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் நேரடியாக கரோனாவில் பாதிக்கப்பட்டாலோ அல்லது கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் போது பாதிக்கப்பட்டோலோ, கரோனாவில் உயிரிழப்பு ஏற்பட்டோலோ ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனை, ஓய்வுபெற்ற மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், உள்ளாட்சிகளில் பணியாற்றுவோர், ஒப்பந்தப் பணியாளர்கள், தினக்கூலிகள், மாநிலங்களால் வெளிப்பணி மூலம் வரவழைக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்கள், மத்திய அரசு மருத்துவமனைகள், மத்திய, மாநில அரசுகளின் தன்னாட்சி மருத்துவமனைகள், எய்ம்ஸ், ஐஎன்ஐ ஆகியவற்றில் பணியாற்றுவோர் இந்தத் திட்டத்தில் வருவார்கள்.
இந்தக் காப்பீடு திட்டத்தை முதல் கட்டமாக மார்ச் 30-ம் தேதி முதல் 90 நாட்களுக்கு மத்திய அரசு அறிவித்தது. அதன்பின், மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்து செப்டம்பர் 25-ம் தேதிவரை அறிவித்தது. இப்போது, மேலும் 6 மாதங்களுக்கு அதாவது 180 நாட்களுக்கு நீட்டித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு எந்தவிதான வயது வரம்பும் இல்லை. தனிப்பட்ட நபர்கள் பதிவு செய்வதும் அவசியமில்லை. இந்தக் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தவர்கள் வேறு காப்பீடு திட்டத்திலும் பதிவு செய்யலாம்.
இந்தக் காப்பீடு திட்டத்தின் முழுமையான ப்ரீமியம் தொகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செலுத்தும். வேறு காப்பீட்டை இந்தத் திட்டத்தோடு சேர்த்து எடுத்திருந்தால், அதற்குத் தனியாகப் பயனாளிகள் பணம் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 61 பேருக்கு காப்பீடுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், 156 பேருக்கான காப்பீடு விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், 67 விண்ணப்பங்கள் இன்னும் மாநில அரசுகளால் தாக்கல் செய்யவில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT