Published : 16 Sep 2020 07:01 AM
Last Updated : 16 Sep 2020 07:01 AM
பெங்களூருவில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து சிரியாவில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் கண் மருத்துவராக பணியாற்றிய அப்துர் ரஹ்மான் (28), ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்துக்காக, கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த மார்ச் மாதம் டெல்லியில் காஷ்மீரை சேர்ந்த ஜஹான் சயிப் ஷமி வாணி, அவரது மனைவி ஹினா பஷீர் பீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஐ.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ கிளை அமைப்பான ஐஎஸ்கேபி அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
ஜஹான் சயிப் ஷமி வாணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றிய அப்துர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். இவர் ஐஎஸ்கேபி அமைப்புக்காக ஆட்களை தேர்வு செய்து சிரியாவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் 7 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா சென்று ஐ.எஸ். நிர்வாகிகளிடம் நேரடியாக பயிற்சி பெற்றுள்ளார்.
கடந்த 2014-ல் பெங்களூருவைச் சேர்ந்த பயாஸ் மசூத் என்ற பட்டதாரி இளைஞர் ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவரை கைது செய்ய தேடிய போது, 2013 மே மாதத்தில் பயாஸ் மசூத் காணாமல் போய் விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், அவரது பெற்றோர் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு பயாஸ் மசூத் தனது பெற்றோர், மனைவி மற்றும் 2 குழந்தைகளை விட்டு எங்கு சென்றிருப்பார் என்று தேடினர். அப்போது அவர் போலி பாஸ்போர்ட் மூலம் கத்தார் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவர் அங்கிருந்து எங்கு சென்றார் எனத் தெரியவில்லை. இந்நிலையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மருத்துவர் அப்துர் ரஹ்மானிடம் விசாரித்த போது பயாஸ் மசூத் பற்றிய தகவல்கள் கிடைத்தன.
இதுகுறித்து அப்துர் ரஹ்மான் அளித்துள்ள வாக்குமூலத்தில், “பயாஸ் மசூத் கடந்த 2009-ல் பெங்களூருவில் இஸ்லாமியர்களுக்காக தனி வலைதளம் தொடங்கி, அதில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக எழுதி வந்தார். அதன் மூலம் அவரது அறிமுகம் எனக்கு கிடைத்தது. நான் 2013-ல் சிரியா செல்லும் முயற்சியில் ஈடுபட்டேன்.
துருக்கி அகதிகள் முகாமில் இருந்த போது பயாஸ் மசூத் மற்றும் அவரது இரு நண்பர்களை சந்தித்தேன். பின்னர் அவர்களுடன் சிரியா சென்ற பிறகு பயாஸ் மசூத் உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு 2014-ல் நடந்த தாக்குதலில் பயாஸ் மசூத் உயிரிழந்து விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT