Published : 15 Sep 2020 04:55 PM
Last Updated : 15 Sep 2020 04:55 PM
பிரதமர் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் கோரியுள்ளது. இப்பிரச்சனையை இன்று பூஜ்ஜிய நேரத்தில் அக்கட்சியின் எம்.பியான ஜோதிமணி எழுப்பினார்.
இது குறித்து மக்களவையின் இரண்டாவது நாள் பூஜ்ஜிய நேரத்தில் கரூர் தொகுதி எம்.பியான ஜோதிமணி பேசியதாவது: பி.எம் கிசான் எனும் பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கிழ் தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் நடைபெற்றுள்ளது.
லட்சக்கணக்கான தகுதியுள்ள விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி கிடைக்கவில்லை. ஆனால், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட போலி பயனாளிகள் சேர்கப்பட்டுள்ளனர்.
பெரும் பணக்காரர்கள், கார்ப்பரேட்டுகளின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிக்கடன்களை இந்த அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால், விவசாயிகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்யாமல் அவர்களை முற்றிலுமாகக் கைவிட்டு விட்டது.
இச்சூழலில், விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த சிறிய திட்டத்தை கூட முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இதில், ஊழல் மலிந்து கிடப்பது வேதனை அளிக்கிறது.
இந்த ஊழலில் அதிகாரிகள் மட்டுமே பலிகடாவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆளும் அதிமுக அரசிற்கு தெரியாமல் இந்த ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
மேலும் தமிழக பாஜக பல்வேறு அரசு திட்டங்களை பகிரங்கமாகவே கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
அரசு திட்டங்கள் முறையாக எவ்வித அரசியல் தலையீடு இல்லாமல், தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இம்மாதிரியான ஊழலுக்கு அரசியல் குறுக்கீடுகள் வழிவகுக்கின்றன.
தமிழகத்தில் நடைபெற்றுள்ள இந்த மாபெரும் ஊழலை விசாரிக்க உடனடியாக மத்திய அரசு சிபிஐ விசாரணை அமர்த்த வேண்டும். இதற்காக உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT