Published : 15 Sep 2020 03:10 PM
Last Updated : 15 Sep 2020 03:10 PM
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமை பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிறது என்றும் கோவிட்-19 உபகரணம் வாங்குவதில் கடும் ஊழல் என்றும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
உ.பி.யில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டார், அவர் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக முதல்வர் யோகியிடம் முறையிட்டார். அதாவது மாவட்ட போலீஸ் உயரதிகாரியும் மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டும் சேர்ந்து தன்னை மிரட்டிப் பணம் பறிக்கப் பார்க்கின்றனர் என்றும் தன் உயிருக்கு ஆபத்து என்றும் பாதுகாப்பு வேண்டும் என்றும் முறையிட்டார். இந்நிலையில் அந்த வர்த்தகர் கொல்லப்பட்டார் என்று சஞ்சய் சிங் கூறுகிறார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “மஹோபாவில் இந்திகாந்த் திரிபாதி என்ற வர்த்தகர் இருந்தார். இவரிடம் மாவட்ட எஸ்.பி.யும் மேஜிஸ்ட்ரேட்டும் எப்படி மிரட்டி ரூ.5 லட்சம் கேட்டனர் என்பதற்கான குரல் பதிவு என்னிடம் உள்ளது. திரிபாதி பணத்தைக் கொடுக்க முடியாது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய போது எஸ்பி,அவரை கொலை செய்வதாக மிரட்டுகிறார்.
பயந்து போன வர்த்தகர் திரிபாதி, தான் கொலையாவதற்கு ஒரு வாரம் முன்னதாக வீடியோ வெளியிட்டார். அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முறையிட்டார். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர் நேற்று மரணமடைந்தார்.” என்றார் சஞ்சய் சிங்.
மேலும் அவர் கூறும்போது இந்நிலையில் முதல்வர் நாற்காலியில் அமர யோகி ஆதித்யநாத்துக்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
“இதுவரை வர்த்தகர் கொலை தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. எனவே ஆம் ஆத்மி இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோருகிறது. மூத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக உ.பி.போலீஸ் நியாயமான விசாரணை நடத்தாது” என்றார் சஞ்சய் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT