Published : 15 Sep 2020 11:40 AM
Last Updated : 15 Sep 2020 11:40 AM
திங்களன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் கரோனா ஊரடங்கின் போது எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்பதை கணக்கிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இது கடும் விமர்சனங்களுக்குட்பட்டு வருகிறது. சோனியா காந்தியின் ஹெல்த் செக்-அப் காரணமாக வெளிநாட்டில் உள்ள ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “லாக்டவுன் காலக்கட்டத்தில் எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்ற கணக்கு மோடி அரசிடம் இல்லை.
எத்தனை பேர் வேலையிழந்தனர்.. என்ற கணக்கு இல்லை எனில், நீங்கள் கணக்கிடவில்லை எனில் ஒருவரும் மரணமடையவில்லை அப்படித்தானே? உயிர்கள் பறிபோனதை பற்றி அரசுக்கு அக்கறை இல்லை என்பதுதான் இதில் மிகவும் துயரார்ந்தது. அவர்கள் மரணித்ததை உலகமே பார்த்தது. ஆனால் மோடி அரசுக்கு தெரியவில்லை.” என்று ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் திங்களன்று, ஊரடங்கு காலத்தில் பலியான தொழிலாளர்கள் குறித்த கேள்வி எழுந்தது. இந்த விவரங்களை அரசு சேகரிக்கவில்லை என எழுத்துபூர்வமான பதிலில் மத்திய தொழிலாளர்துறை இணைஅமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் கைவிரித்துள்ளார்.
கரோனா பரவலினால் கடந்த மார்ச் 25 முதல் மொத்தம் 68 நாட்களுக்காக மத்திய அரசு ஊரடங்கு அறிவித்திருந்தது. தேசிய அளவிலான இந்த ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்கள் வீடு திரும்ப பல்வேறு வழிகளை கையாண்டனர்.
இதில், பல நூறு கி.மீ தொலைவிற்கு நடந்தே சென்றவர்களில் பலரும் வழியில் பல்வேறு காரணங்களால் பலியாகினர். இவர்களை தடுக்க முயன்ற போலீஸாருக்கு அஞ்சி ரயில் பாதை வழியாகவும் பலர் நடந்து சென்றனர்.
இதன் மீதான கேள்வியை இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக்கின் தமிழக எம்.பியான கே.நவாஸ்கனி உள்ளிட்ட மூவர் எழுப்பியிருந்தனர். இதில் அவர்கள், ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் தங்கள் வீடுதிரும்பும் போது பலியான விவரங்கள் அளிக்கும்படி கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு எழுத்துபூர்வ மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர், அதன் மீதான விவரங்களை அரசு சேகரிக்கவில்லை எனப் பதில் அளித்திருந்தார்.
இதற்குத்தான் ராகுல் காந்தி தற்போது எதிர்வினையாற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT