Published : 14 Sep 2020 04:43 PM
Last Updated : 14 Sep 2020 04:43 PM
நீங்கள் கொண்டாடுவது இந்தி தினம் அல்ல இந்தித் திணிப்பு தினம் என்று சாடிய கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி இந்தி தினம் கொண்டாடுவது இந்தித் திணிப்புதான் என்று சாடினார்.
இன்று இந்தி தினத்தை அடுத்து பாஜக தலைவர்கள் பலரும் இந்தி மொழியைப் புகழ்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்குரல் எழுப்பிய ஹெச்.டி.குமாரசாமி, ‘கன்னடர்களின் இயல்பான அமைதி குணத்தை பலவீனம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்’ என்று எச்சரித்தார்.
தொடர் ட்வீட்களில் அவர் கூறியதாவது:
இந்தியா என்பது பலதரப்பட்ட மொழிகளின், பண்பாடுகளின், மரபுகளின் நிலம். மற்ற மொழிகளைப் பேசுவோரிடத்தில் இந்தியை எப்படியாவது திணித்து விட வேண்டும் என்று பாடுபடுகின்றனர். இன்றைய இந்தி தினம் கொண்டாடுதலும் இந்தித் திணிப்பின் ஒரு அங்கம்தான். பெருமைக்குரிய கன்னட மொழிக்காரர்கள் இந்தி தினத்தை எதிர்க்கின்றனர். இந்தி தினம் என்பது மொழித்திமிர்.
இந்தி நம் தேசிய மொழி கிடையாது, அப்படியொன்று அரசியல் சாசனத்தில் இல்லை. இந்தியை வைத்துச் செய்யும் அரசியல் தீவிரமாகி வருகிறது. மக்கள் புரட்சி வெடிக்கும் முன்னால் இத்தகைய போக்குகளை நிறுத்துங்கள்.
கல்வியை காரணம் காட்டி இந்தியைத் திணிக்கிறார்கள் மொழி என்பது சுயவிருப்பத் தெரிவு சார்ந்தது திணிக்கக் கூடியது அல்ல. ஒரு மொழியை திணிப்பது மண்ணின்மொழியின் அடையாளத்தை அழிக்கக் கூடாது. நாட்டின் பன்முக, பன்மொழிக் கலாச்சாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்கள் ஆபத்தில் முடியும்.
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி தினத்தைக் கொண்டாடுவது ஏன்? அதை ரத்து செய்ய வேண்டும்.
இந்தி தினம் கொண்டாட வேண்டுமென்றால் நாட்டின் பிற மொழிகளின் தினத்தையும் கன்னட மொழி தினத்தையும் கொண்டாட வேண்டும். தனித்தனி தேதிகள் இதற்காக குறிக்கப்பட வேண்டும். கர்நாடகா மாநிலம் உருவான நவம்பர் 1 கன்னட தினமாக நாடு முழுதும் அனுசரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறினார் ஹெச்.டி.குமாராசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT