Published : 13 Sep 2020 12:15 PM
Last Updated : 13 Sep 2020 12:15 PM
காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க செயற்குழு முதல் பொதுச் செயலாளர்கள் வரை பல்வேறு மாற்றங்களைச் செய்து ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்தியுள்ளார் கட்சியின் தலைவர் சோனியா காந்தி.
காங்கிரஸ் கட்சியில் தலைமுறை மாற்றம் ஏற்படுவதற்கும், மீண்டும் ராகுல் காந்தி தலைவராக வருவதற்கான முதல்படியாகவே பார்க்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் தேவை என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களின் நெருக்கடிக்கு தலைமை பணியவில்லை. துணிச்சலாகவே அவர்களில் பலரை செயற்குழுவிலிருந்து நீக்கியும், பொதுச் செயலாளர்களில் இருந்து நீக்கியும், நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை காட்டுகிறது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்திக்கு சமீபத்தில் கடிதம் எழுதிய 23 தலைவர்களில் முக்கியமானவரான குலாம்நபி ஆசாத் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அம்பிகா சோனி, முகுல்வாஸ்னிக்,மோதிலால் வோரா, மல்லிகார்ஜுன கார்கே போன்றோர் நீக்கப்பட்டு இளம் தலைவர்கள், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி முதல் சிறப்பு குழு உருவாக்கம் முதல் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பலரும் ராகுல் காந்தியின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவர்கள் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.
சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் இடம் பெற்றிருந்த 23 தலைவர்களில் முகுல் வாஸ்னிக் மட்டுமே சோனியா காந்திக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 6 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளார். மற்ற 22 பேர் இடம்பெறவில்லை.
குறிப்பாக முகுல் வாஸ்னிக் மட்டுமே பொதுச்செயலாளராக நீடிக்கிறார். குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், சசி தரூர், மணிஷ் திவாரி ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்படவில்லை. அதிலும் குலாம் நபி ஆசாத்திடம் இருந்து பொதுச்செயலாளர் பதவி பதவி பறிக்கப்பட்டாலும், செயற்குழுவுக்கு ஆனந்த் சர்மாவுடன், குலாம் நபி ஆசாத்தும் வழக்கமான உறுப்பினராகத் தொடர்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் செய்யப்பட்டுள்ள நிர்வாகரீதியான இந்த பெரிய மாற்றங்கள் மீண்டும் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ஏற்பதற்கு வசதியாக செய்யப்பட்டுள்ளன என்பதை காட்டுகின்றன என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக்கு நிரந்த அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 26 உறுப்பினர்களில் 11பேர் ராகுல் காந்தியின் நம்பிக்கையைப் பெற்றவர்கள்.
காரியக் கமிட்டிக்கு வழக்கமான உறுப்பினர்களில் கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா, அஜெய் மக்கான், ஜிதேந்திர சிங், ஆர்எஸ் மீனா ஆகியோர் ராகுல் காந்தியின் தீவிரமான விசுவாசிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காரியக் கமிட்டிக்கான சிறப்பு அழைப்பாளர்களில் 7 உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் தீவிரமான நம்பிக்கையைப் பெற்றவர்கள்.
இதில் 17 மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 13 பேர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான தொடர்பைப் பெற்றவர்கள்.
புதிதாக நியமிக்கப்பட்ட 9 பொதுச்செயலாளர்களில் சுர்ஜேவாலா, ஜிதேந்திரசிங், வேணுகோபால், அஜெய் மக்கான் ஆகியோர் ராகுல் காந்தியுடன் எப்போதும் நெருங்கிய தொடரில் இருப்பவர்கள். இதன் மூலம் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்த சோனியா காந்தி மிகப்பெரிய அளவில் அமைப்புரீதியான மாற்றங்களைச் செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது.
அதுமட்டுமல்லாமல், அனுபவம் மிக்க தலைவர்களுடன் சேர்ந்து இளம் தலைவர்களும் பணியாற்றும் நோக்கில் கலவையாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் பார்க்கலாம் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வானிக் குமார் கூறுகையில் “ காங்கிரஸ் கட்சியில் செய்யப்பட்டுள்ள நிர்வாகரீதியான மாற்றங்களைச் செய்து சோனியா காந்தியின் முத்திரையை பதித்துவிட்டார்.
நிர்வாகக்குழுவில் அனுபவமிக்க தலைவர்கள், விஸ்வாசமானவர்கள், இளம் தலைவர்கள் என அடுத்த தலைமுறைக்கான மாற்றத்துக்கு வழிவிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT