Published : 12 Sep 2020 06:09 PM
Last Updated : 12 Sep 2020 06:09 PM
அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் அப்பர் சுபான்ஸ்ரீ பகுதியில் வேட்டைக்கு சென்ற 5 இந்தியர்களை சீன ராணுவத்தால் பிடித்துச் சென்ற நிலையில், இந்திய ராணுவத்தின் பேச்சுவாரத்தைக்குப்பின், இன்று 5 பேரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்.
தனு பாக்கர், பிரசாத் ரிங்லிங், காரு திரி, டோக்டு எபியா, டோச் சிங்கம் ஆகிய அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த 5பேரும் பாதுகாப்புடன் இந்திய ராணுவத்திடம், சீன ராணுவம் ஒப்படைத்தது என்று தேஜ்பூர் பாதுகாப்புப் பிரிவின் செய்தித்தொடர்பாளர் ஹர்ஸ் வர்தன் பாண்டே தெரிவித்தார்.
கடந்த 2-ம் தேதி அப்பர் சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள நாக்சோ பகுதியில் இந்த 5 இளைஞர்களும் வேட்டைக்கும், மூலிகைகள் சேகரிக்கவும் சென்றிருந்தனர். ஆனால், இவர்கள் 5 பேரும் தவறுதலாக கட்டுப்பாடு எல்லைக் கோட்டைக் கடந்து செரா-7 பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். இதையடுத்து இவர்களை சீன ராணுவம் பிடித்துச் சென்றது.
இந்த 5 பேரின் குடும்பத்தினரும், சமூக ஊடகங்களில் காணாமல் போன விவரத்தை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் சீனராணுவத்தினருடன் இந்திய ராணுவத்தினர் நடத்திய பேச்சுக்குப்பின் பின் 5 பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், “ அருணாச்சலப்பிரதேசம் இயற்கை வளங்கள் நிறைந்த, சாகசங்கள் செய்யக்கூடியவர்களுக்கு உகந்த இடம்.இந்த மாநிலத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கட்டுப்பாடு எல்லைக் கோட்டைக் கடந்து கடந்த வாரம் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரையும் இந்திய ராணுவம் தொடரந்து மேற்கொண்ட முயற்சிகளால், பாதுகாப்புடன் சீன ராணுவத்திடம் இருந்து மீட்டுள்ளது.
5 இளைஞர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டபின்பு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப்பிரதேச முதல்வர் பீமா கண்டு ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களும் சீன ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களை பாதுகாப்புடன் மீட்டுக்கொடுத்த இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்திய ராணுவத்தின் சீரிய முயற்சிகளுக்கும், மத்திய அரசின் நடவடிக்கைக்கும் நான் முழுமனதுடன் நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த 5 இளைஞர்களின் குடும்பத்தினரும், இந்திய ராணுவத்தின் முயற்சிக்கும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT