Published : 12 Sep 2020 01:25 PM
Last Updated : 12 Sep 2020 01:25 PM
வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதற்கான அனைத்துசட்ட விதிமுறைகளிலிருந்தும் பிஎம் கேர்ஸ் நிதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிஏஜி ஆடிட் தேவை எனும் முன் நிபந்தனையை பூர்த்தி செய்யாமலேயே இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, சிஏஜி தணிகை தேவை என்ற முன் நிபந்தனையின்றியே இந்த விலக்கை பிஎம் கேர்ஸ் நிதி பெற்றுள்ளது.
இதுதொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டதன் விவரங்களையும் ஆவணங்களையும் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டதில் பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சகம் பிஎம் கேர்ஸ் நிதி அலுவலகத்தின் ஒப்புதல் பெற்றுத்தான் பதில் அளிக்க முடியும். ஏனெனில் ஆர்டிஐ சட்டத்தின் படி தேர்ட் பார்ட்டி என்பதால் சம்மதம் இல்லாமல் பதில் அளிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு அமைப்பின், அறக்கட்டளையைச் சார்ந்தவர்களின் நம்பிக்கை சார்ந்ததாக இருந்தால் கேட்ட தகவலை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்ற பிரிவையும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிஎம் கேர்ஸ் நிதியின் இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)பிரிவில் “வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டம், 2010-ன் அனைத்துப் பிரிவுகளின் கீழ் பிஎம் கேர்ஸ் விலக்கு பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் சில தினங்களில் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.39.68 லட்சம் அயல்நாட்டு நன்கொடை நிதி அயல்நாட்டு கரன்சியில் வந்துள்ளது.
அயல்நாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டம் என்பது வெளிநாட்டிலிருந்து அமைப்புகளுக்கு வரும் நன்கொடை அதாவது பணம் அல்லது பரிசுப்பொருள், இந்திய ரூபாய் அல்லது வெளிநாட்டு கரன்சி என்று எது வந்தாலும் அதனை முறைப்படுத்தக் கூடிய சட்டமாகும். இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த அமைப்புகள் பண்பாட்டு, பொருளாதார, கல்வியியல், மதம் சார்ந்த அல்லது சமூக பணித்திட்டங்களை வைத்திருப்பது அவசியம். அரசு இதற்கு அனுமதியளிக்க வேண்டும். 49,843 அமைப்புகள் இந்த எஃப்சிஆர்ஏ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 20,674 அமைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காரணம் என்.ஜி.ஓ அமைப்புகள் பலவற்றுக்கு மத்திய அரசு செக் வைத்தது.
2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட உத்தரவில் மத்திய அரசு அல்லது மாநில அரசு சட்டத்தின் கீழ் வரும் அனைத்து அமைப்புகளும் எஃப்.சி.ஆர்.ஏ. சட்டத்தின் கீழ் விலக்கு அளித்தது.
ஆனால் ஜனவரி 30, 2020-ல் மத்திய அரசு வெளியிட்ட புதிய உத்தரவில், அரசியல் கட்சி அல்லாத எந்த ஒரு அமைப்பும் விலக்கு பெற அந்த அமைப்பு மத்தியச் சட்டம் அல்லது மாநிலச்சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதாகவும், அல்லது மத்திய மாநில அரசுகளின் நிர்வாக, அதிகாரமட்ட உத்தரவின் கீழ் நிறுவப்பட்டதாகவும் அல்லது முழுதும் அரசுக்குச்சொந்தமான மற்றும் சிஏஜி அல்லது அது சார்ந்த முகமைகளினால் தணிக்கைக்கு உட்பட்டதாகவும் உள்ள அமைப்புகள் விலக்கு பெறலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.
பிஎம் கேர்ஸ், பதிவுச்சட்டம் 1908-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு பொது அறக்கட்டளையாகும். இது மத்திய அல்லது மாநில சட்டத்தின் கீழ் அமையப்பெற்றது அல்ல. ஆர்டிஐயின் கீழ் அது பொது அதிகாரத்தின்கீழ் வராது என்றே பிஎம் கேர்ஸ் வாதிட்டு வருகிறது. அரசால் நிறுவப்பட்ட எந்த ஒரு அமைப்பும் இந்த ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பொது அதிகாரத்துக்குட்பட்டதுதான். பிஎம் கேர்ஸ் நிதி தனிப்பட்ட தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படுவதே தவிர சிஏஜியினால் அல்ல. இந்நிலையில் தனது ஜனவரி மாத புதிய உத்தரவில் உள்ள எந்த நிபந்தனையையும் நிறைவேற்றாத பிஎம் கேர்ஸ் நிதி வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திலிருந்து விலக்கு பெற்றுள்ளது.
இந்த விலக்கு தொடர்பாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்குக் கூறும்போது, “எப்.சி.ஆர்.ஏ சட்டத்தின் கீழ் பிஎம் கேர்ஸுக்கு விலக்கு அளிக்க முடியும். இந்த விலக்கு மத்திய பல்கலைக்கழகங்களுக்கு வழங்கக்கூடியது” என்றார். ஆனால் அத்தகைய பல்கலைக் கழகங்கள் சிஏஜி தணிக்கைக்கு உட்பட்டதே.
ஜூன் மாதத்தில் ஆர்டிஐ தன்னார்வலர், சமூக செயல்பாட்டாளர் லோகேஷ் பத்ரா, எப்போது பிஎம் கேர்ஸ் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விலக்கு கேட்டு விண்ணப்பித்தது, எப்பொது விலக்கு அளிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவலுரைமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். பிறகு இவர் ஆகஸ்ட் 14ம் தேதி அப்பீல் மேற்கொண்டார். அதற்குத்தான் குறிப்பிட்ட விளக்கங்களை அளிக்க முடியாது ஏனென்றால் சம்பந்தப்பட்ட கேள்விக்குரிய அமைப்பு தேர்ட் பார்ட்டியினுடையது எனவே அவர்கள் சம்மதம் இல்லாமல் தகவல் அளிக்க முடியாது என்று உள்துறை அமைச்சகம் பதிலளித்திருந்தது.
- தி இந்து (ஆங்கிலம்)
தமிழில் சுருக்கமாக இரா.முத்துக்குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT