Published : 12 Sep 2020 08:26 AM
Last Updated : 12 Sep 2020 08:26 AM
பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல் பந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பெங்களூருவில் உள்ள வசந்த் நகரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. சேஷாத்ரிபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தபோது கஞ்சா விற்பனை செய்த ஞானசேகர் (37) என்ற ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஞானசேகரிடம் நடத்திய விசாரணையில் குல்பர்காவில் உள்ள சித்துநாத் (22) என்ற தொழிலதிபரிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக கூறினார். இதையடுத்து தனிப்படை போலீஸார் குல்பர்காவுக்கு சென்று சித்துநாத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது ஆட்டுப் பட்டியில் பாதாள குழி அமைத்து 5 கிலோ அளவில் பொட்டலங்கள் கட்டி மொத்தம் 1,352 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கஞ்சா பொட்டலங்கள் ஒடிசாவில் இருந்து காய்கறி லாரி மூலம் கர்நாடகாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த லாரி ஓட்டுநர் சந்திரகாந்த் (36), காய்கறி தரகர் நாகநாத் (35) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கமல் பந்த் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT