Published : 11 Sep 2020 03:15 PM
Last Updated : 11 Sep 2020 03:15 PM
கரோனா வைரஸ் ஒழிந்துவிட்டது, போயே போய்விட்டது. ஆனால், மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சிையத் தடுக்கவும், பேரணிகள் நடத்துவதைத் தடுக்கவும்தான் மம்தா பானர்ஜி ஊரடங்கு விதிக்கிறார் என்று மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் உச்சதத்தை எட்டி வருகிறது. நாள்தோறும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய நிலவரப்படி 45 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சூழவில் கரோனா ஒழிந்துவிட்டது என்று மாநில பாஜக தலைவர் பேசியது பெரும் சலசலப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் வியாழனன்று மட்டும் 3,112 புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக பாதிப்பு 1,93,175-ஐ எட்டியுள்ள நிலையி்ல், 3771 பேர் மரணமடைந்துள்ள நிலையில் ஹூக்ளி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் கரோனா ஒழிந்துவிட்டது என்று பேசியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை முதன்முதலாக பிடித்துவிட வேண்டும் என பாஜகவும் கடும் போட்டியில் இருக்கின்றன.
இந்நிலையில் மிட்னபூர் தொகுதி அமைந்துள்ள ஹூக்ளி மாவட்டத்தில் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றார்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் திலீப் கோஷ் பேசுகையில் “ கரோனா வைரஸ் ஒழிந்துவிட்டது, கரோனா வைரஸ் போய்விட்டது. ஆனால், பாஜகவின் வளர்ச்சியை மாநிலத்தில் தடுக்கும் நோக்கில், பேரணிகளை நடத்தவிடாமல் முதல்வர் மம்தா பானர்ஜி ஊரடங்கு விதிக்கிறார். ஆனால் எங்களை யாரும் தடுக்கமுடியாது.
இந்த மாநிலத்தில் உள்ள பெரும்பகுதி மக்கள் பாஜகவை நம்புகிறார்கள், அதனால்தான் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரசை மக்கள் எதிர்க்கிறார்கள். 2019-ம்ஆண்டு தேர்தலில் பாஜகவை முடித்துவிடலாம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் எண்ணினர்.
பாஜக என்ன செய்யப்போகிறது பாருங்கள் என அந்த நேரத்தில் நான் சொல்லியிருந்தேன். அதே இப்போது பார்க்கிறார்கள். மம்தா பானர்ஜிக்கு பிரதமராக விருப்பம். ஆனால், முதல்வராக இருக்கிறார். 2021-ம் ஆண்டு மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம். சில மாதங்கள் பொறுத்திருங்கள், மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்காலம் மாறப்போகிறது. ஷியாமா பிரசாத் முகர்ஜியின் கனவுகளை நிறைவேற்றி, மேற்கு வங்கத்தை தங்க வங்கமாக மாற்றுவோம்
இவ்வாறு திலீப் கோஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT