Published : 11 Sep 2020 02:40 PM
Last Updated : 11 Sep 2020 02:40 PM
கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலிருந்து நீங்கியபின்பு கூட, காணொலி மூலம் நீதிமன்றங்கள் சில பிரிவுகளில் இயங்கலாம் என்று சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர் பூபேந்திர யாதவ் தலைமையிலான நிலைக்குழு இந்த அறிக்கையை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அளித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் முதன்முறையாக சட்டம் மற்றும் நீதி்க்கான நிலைக்குழு அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "பழமையான நடைமுறைகளின் கடைசி கோட்டையாக நீதிமன்ற அறை கருதப்படும் நிலையில், சமீபத்திய தொழில்நுட்பத்திற்காக இப்போது கதவுகளைத் திறக்கும் நேரம் வந்துவிட்டது. நீதின்றம் அறை என்பது ஒரு இடம் என்பதைவிட, சேவை செய்யும் இடமாக இருக்கிறது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, காணொலி மூலம் நீதிமன்றங்கள் இயங்குவதால், மக்களுக்கு டிஜிட்டல் முறையில் நீதி எளிமையாகவும், வேகமாகவும் கிடைக்கிறது.
காணொலி மூலம் நீதிமன்றங்கள் செயல்படும் முறை கரோனா வைரஸ் பரவல் முடிந்தபின்பும் கூட, சில பிரிவுகளில் அனைவரின் ஒப்புதலோடு செயல்பட வேண்டும்.
குறிப்பாக காணொலி மூலம் நீதிமன்றங்கள், பலவேறு தீர்ப்பாயங்களான டிடிஎஸ்ஏடி, ஐபிஏபி, என்சிஎல்ஏடி உள்ளிட்டவற்றில் நாடுமுழுவதும் காணொலி மூலம் நடக்கலாம். இதன் மூலம் சம்மந்தப்பட்ட மனுதாரர்களும், பிரிதிவாதிகளும் நேரடியாக ஆஜராக வேண்டியதில்லை.
பாரம்பரியமாக செயல்படும் நீதிமன்றங்களைவிட, காணொலி மூலம் செயல்படும் நீதிமன்றங்களில் செயல்பாடு, நடைமுறை ஆகியவை மேம்பட்டதாக இருக்கும். இந்த நீதிமன்றங்கள் மிகவும் சிக்கனமாகவும், மக்கள் எளிதில் அணுகும் விதத்திலும், விரைவாக நீதியும் வழங்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது.
நீதித்துறை மற்றும் சட்ட விவகாரங்கள் செயலாளர்கள், உச்ச நீதிமன்ற செயலாளர், இந்திய பார் கவுன்சிலின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் காணொலி நீதிமன்றங்கள் தொடர்பாக விரிவான ஆலோசகள், கலந்துரையாடல்களை நடத்தி கருத்துக்களைக் கேட்டு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், பார்கவுன்சில்,வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை எழுப்பிய கவலைகள், குறைகளையும் நிலைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. காணொலி நீதிமன்றங்களில் சில குறைபாடுகளும் உள்ளன, ஆனால் தற்போதுள்ள நடைமுறை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்றாலும் ஏற்கெனவே இருக்கும் முறையில் முன்னேற்றமும் தேவை எனக் குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT