Published : 11 Sep 2020 08:18 AM
Last Updated : 11 Sep 2020 08:18 AM
மங்களூரு கலவர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ (பிஎப்ஐ) அமைப்பைச் சேர்ந்த 21 பேருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
குடியுரிமை திருத்தச் சட்டத் துக்கு எதிராக மங்களூருவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதில் நூற்றுக்கணக்கான பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், கலவரத்தில் ஈடுபட்டதாக ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட வர்கள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த மார்ச் மாதம் விசாரித்த நீதிபதி மைக்கேல் குன்ஹா, “கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுபவர்கள் சம்பந்தப் பட்ட பகுதியில் இருந்ததற்கான ஆதாரத்தை போலீஸார் சமர்ப்பிக்கவில்லை. அவர்கள் குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது போல தெரிகிறது” எனக் கூறினார்.
மேலும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய அவர், அதேசமயத்தில் அதை இந்தவழக்கின் இறுதியாக எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.
தலா ரூ.25 ஆயிரம்..
இதனைத் தொடர்ந்து, வழக்கு நடைபெறும் விசாரணைநீதிமன்றத்தில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் தலா ரூ.25 ஆயிரம் செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT