Published : 11 Sep 2020 08:02 AM
Last Updated : 11 Sep 2020 08:02 AM
எல்லையில் இந்தியா, சீனா இடையே பதற்றம் நிலவும் சூழ்நிலையில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் மாஸ்கோவில் சந்தித்தபோது தீர்வு சாத்தியமாக 5 அம்சத் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது.
கடந்த 4-ந் தேதி மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றபோது, சீன ராணுவ மந்திரி வெய் ஃபெங்கியை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், சீன துருப்புகள் ஒரு தலைபட்சமாக அசல் கட்டுப்பாட்டு கோட்டுடனான நிலைமையை மாற்ற முயற்சிக்கும் செயல், இரு தரப்பு ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று கண்டித்ததுடன், மோதல் பகுதிகளில் இருந்து படைகளை முழுமையாக விலக்கிக்கொள்ள இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் அதன்பின்னரும் கடந்த 7-ந் தேதி இரவு சீன துருப்புகள் பயங்கரமான ஆயுதங்களுடன் லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் இந்திய நிலைகளில் ஒன்றை நோக்கி அத்துமீறி முன்னேறி துப்பாக்கி சூடு நடத்தியது, இந்நிலையில் இருநாடுகளும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் இருநாடுகளும் எல்லையில் படைகள் குவிப்பில் ஈடுபட்டு பதற்றத்தை அதிகரித்தன.
மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு சென்றார். இந்த கூட்டத்தின் நடுவே அவர் தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களை அடுத்தடுத்து சந்தித்து, இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து, ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தை ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் நடத்தினார். இதில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், லடாக் மோதல் வலுத்து வருகிற நிலையில் சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இருதரப்பிலும் நடைபெற்ற வெளிப்படையான, ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையின் முடிவில் 5 அம்சத்திட்டத்துக்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்தனர்.
அதாவது, “எல்லையில் தற்போது உள்ள சூழ்நிலை இருதரப்புக்கும் உகந்ததாக இல்லை. எனவே இருதரப்பு எல்லை படைகளும் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட வேண்டும். விரைவில் படைகளை வாபஸ் பெற்று, இருதரப்பினரும் முறையான இடைவெளிடைப்பிடித்து பதற்றத்தை தணிக்க வேண்டும்.
ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி எல்லைப் பிரச்சினையில் கருத்தொற்றுமை கொண்டு இந்திய - சீன உறவுகளை பலப்படுத்த வேண்டும். வேறுபாடுகள் தகராறுகளாக மாறாமல் தடுக்க வேண்டும்.
எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த ஒரு செயலிலும் இருதரப்பினரும் ஈடுபடக்கூடாது. எல்லையில் பதற்றம் தணிந்த பிறகு இருநாடுகளுக்கு இடையேயும் நம்பிக்கை வளர்ப்பதற்கான புதிய அளவுகோல்களை செயல்படுத்த வேண்டும்.
மேலும் சிறப்புப் பிரதிநிதிகள் மூலம் இருநாடுகளும் தொடர்ந்து உரையாடல் நடத்த வேண்டும், இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை நடைமுறைகள் இருதரப்பு கூட்டங்களில், சந்திப்புகளில் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்று இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT