Published : 11 Sep 2020 07:03 AM
Last Updated : 11 Sep 2020 07:03 AM

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலை சீரமைக்க முடிவு: பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

டேராடூன்

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலை மறுசீரமைக்கும் திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்கு உள் நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பத்ரிநாத் கோயிலை மறுசீரமைக்கும் திட்டத்தை காணொலி வாயிலாக நேற்று உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பிரதமர் மோடி முன்பாக சமர்ப்பித்தார். இந்தக் கூட்டத்தில் உத்தராகண்ட் சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மகராஜ், அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்தின்படி பத்ரிநாத் கோயிலைச் சுற்றியுள்ள 85 ஹெக்டேர் பகுதியைச் சீரமைத்து பல்வேறு வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த வளாகத்தில் அருங்காட்சியகத்தையும், நவீன ஆர்ட் கேலரியையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணிகளை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை படித்துப் பார்த்த பிரதமர் மோடி, பல்வேறு விஷயங்களை உத்தராகண்ட் முதல்வர், அமைச்சர், அதிகாரிகளிடம் காணொலி வாயிலாக கேட்டறிந்தார். மேலும், பத்ரிநாத் கோயிலின் முக்கியத்துவத்தை உணர்ந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், ஆன்மீக அடிப்படையிலேயே திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள இடத்தை சிறிய பொலிவுறு மற்றும் ஆன்மீக நகரமாக மாற்ற வேண்டும் என்றும் அந்த நகரம், அருகிலுள்ள புனிதத் தலங்களுடன் எளிதில் தொடர்புடைய நகரமாக மாற்றப்பட வேண்டும் என்றும் பிரதமர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த கூட்டத்தின் போது புகழ்பெற்ற கேதார்நாத் கோயில், மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x