Published : 10 Sep 2020 01:34 PM
Last Updated : 10 Sep 2020 01:34 PM
பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியுதவிகள் அற்பகமாகவும், ஒட்டுமொத்தத்தில் போதுமானதாகவும் இல்லை என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அரசைச் சாடியுள்ளார்.
மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகள், வேலையிழப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதான் மந்திரி கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் 42 கோடி மக்களுக்கு ரூ.68,820 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில் கடந்த மார்ச் 26-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில் ரூ.1.70லட்சம் கோடி நிதியுதவியும், இலவசமான உணவு தானியங்களும், ஏழைகள், பெண்கள், முதியோர், விவசாயிகளுக்கு நிதியுதவியும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் சாடி, விமர்சித்துள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிகளும் எவ்வளவு தொகை பெற்றார்கள்?. இதற்கு பெயர் நிவாரண் என்று உண்மையில் சொல்ல முடியுமா அல்லது பெயரளவுக்கு செய்யப்பட்டதா?
தேசிய சமூக உதவித் திட்டத்தின்(என்எஸ்ஏபி) கீழ் 2.81 கோடி மக்களுக்கு ரூ.2,814 கோடி அதாவது, நபர் ஒருவருக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் போதுமானதாக இருக்குமா?
ஜன் தன் வங்கிக் கணக்கில் 20.6 கோடி பெண்களுக்கு ரூ.305 கோடி அதாவது 3 மாதங்களுக்கு முறையே ரூ.500 வீதம், ரூ.1,500 வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பப் பெண், 500 ரூபாயை மூலம் இன்றுள்ள நிலையில் குடும்பத்தை நடத்த முடியுமா?
2.66 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் 2.67 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 2 மாதங்களில் பெற்றுள்ளார்கள். அதாவது மாதத்துக்கு 5 கிலோ வீதம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ உணவு தானியம் போதுமானதாக இருக்குமா?
நீங்கள் வெளியிட்ட புள்ளிவிவரங்களே, நீங்கள் அளித்த பணம் அற்பமாக இருக்கிறது, முழுமையாக போதுமானதாக இல்லை என்பதை நிரூபித்துவிட்டது.
உறுதியாக, நீங்கள் அளித்த பணம் பொருளாதாரத்தில் நுகர்வோரின் தேவையைத் தூண்டும் விதத்தில் செயல்பட முடியாது, பொருளாதாரத்தையும் மீட்சிக்கு கொண்டுவராது.
இவ்வாறு ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT