Published : 09 Sep 2020 06:58 PM
Last Updated : 09 Sep 2020 06:58 PM
நடிகை கங்கணா ரணாவத்தின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம். பெரும் விளைவுகளைப் பின்னர் பார்க்க வேண்டியது இருக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மும்பை பாந்த்ரா பகுதியில் தனது வீட்டை இடித்தது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை விடுத்து, நடிகை கங்கணா ரணாவத் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகை கங்கணா ரணாவத் மும்பையைப் பற்றியும், மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் அவதூறாகப் பேசி கருத்துத் தெரிவித்தார்.
இதனால் நடிகை கங்கணா ரணாவத்துக்கும், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையிலான மோதல் வெடித்தது. மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கணா ரணாவத் அனுமதி பெறாமல் வீட்டில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டதால், இன்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின் வீட்டை இடித்தது.
இதனிடையே சிவசேனா கட்சிக்கும், கங்கணா ரணாவத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “கங்கணாவின் கருத்துக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது எனது கருத்து. எனக்கும், என் கட்சியைச் சேர்ந்த அமைச்சருக்கும் மிரட்டல் வந்ததைக் கூட பெரிதாக எடுக்கவில்லை.
கங்கணாவின் கருத்தையும் மக்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது எனது கருத்து.
ஆனால், கங்கணாவின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம். அவரின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் என்னமாதிரியான தாக்கம் இருக்கும் என்பதை நாம் பார்க்கப்போகிறோம்.
மும்பை போலீஸார், மாநில போலீஸார் எவ்வாறு பணியாற்றுவார்கள் என்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள், அனுபவப்பட்டவர்கள். போலீஸாரின் செயல்பாட்டை அவர்கள் நன்கு அறிவார்கள். ஆதலால், போலீஸார் குறித்து ஒருவர் சொல்வதை நாம் கவனிக்க வேண்டியதில்லை. எனக்கு இதுபோல் பல மிரட்டல்கள் முன்பு வந்துள்ளன. இதையெல்லாம் நான் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மும்பை பாந்த்ரா பகுதியில் தனது வீட்டை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்ததற்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் நடிகை கங்கணா ரணாவத் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
கங்கணா ரணாவத் தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
“உத்தவ் தாக்கரே என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பாலிவுட் திரையுலகில் இருக்கும் மாஃபியாக்களுடன் கூட்டு சேர்ந்து, எனது வீட்டை இடித்துப் பழிவாங்குகிறீர்களா? என்னுடைய வீடு இன்று இடிக்கப்பட்டது.
உங்களின் அகங்காரம் நாளை நொறுக்கப்படும். சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இன்று நடந்ததுபோல் மீண்டும் நடக்காது. எனக்கு இதுபோல் நடக்கும் என்பது எனக்குத் தெரியும். இதற்கு சில அரத்தங்கள் உள்ளன. உத்தவ் தாக்கரே, இந்தக் கொடூரம், இந்தக் கொடுமை எனக்கு நடந்துள்ளது. ஜெய்ஹிந்த், ஜெய் மகாராஷ்டிரா’’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT