Published : 09 Sep 2020 04:45 PM
Last Updated : 09 Sep 2020 04:45 PM
முல்லைப் பெரியாறு அணையை ஆய்வுசெய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட துணைக் குழுவைக் கலைக்க வேண்டும் எனக் கோரிய மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மறுப்பு தெரிவித்து விசாரணையிலிருந்து விலகியுள்ளார்
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோ ஜோசப், ஷீலா கிருஷ்ணன்குட்டி, ஜெஸ்ஸிமோள் ஜோஸ் ஆகியோர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “முல்லைப் பெரியாறு அணையை ஆய்வுசெய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட துணைக் குழுவைக் கலைக்க வேண்டும்.
அணை பாதுகாப்பு பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழு, அதன் பணியை அதை விட குறைந்த அதிகாரம் கொண்ட குழுவுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடாது. பிரதான கண்காணிப்புக் குழுவே முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக பருவமழைக் காலங்களில் தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வை நேரடியாகச் சென்று செய்ய வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்குவது, தேக்கப்படும் நீர் பகிர்ந்தளிப்பு, நீர் திறப்பு விகிதம் மற்றும் அணையைத் திறப்பது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை ஆணையம் விரைவாக ஒரு திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்.
கடந்த 2014 முதல் தற்போது வரை 13 முறை கண்காணிப்புக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டும் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படவில்லை. அதேபோல முல்லைப் பெரியாறு அணையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகளின் விவரங்கள் தொடர்பாகவும், முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பராமரிப்புப் பணிகள் என்ன? அவை ஏன் முடிக்கப்படாமல் எதனால் தாமதப்படுகிறது ?
முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள், பழுது நீக்கும் பணிகள் மத்திய நீர் ஆணையம் கடந்த 2018-ல் வெளியிட்ட 'அணை பாதுகாப்பு, பராமரிப்பு வழிகாட்டு நெறிமுறைகள்' அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறதா? என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளனர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ''எனது சகோதரர் வினோத் போப்டே ஏற்கெனவே முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கில் ஆஜராகியிருந்ததால், இந்த வழக்கை நான் விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகுகிறேன். நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும்'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT