Last Updated : 09 Sep, 2020 12:18 PM

 

Published : 09 Sep 2020 12:18 PM
Last Updated : 09 Sep 2020 12:18 PM

கங்கணா ரணாவத் விவகாரத்தில் தலையிடாதீர்: மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு வந்த தொலைபேசி மிரட்டல்களால் பரபரப்பு

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், நடிகை கங்கணா ரணாவத் : கோப்புப்படம்

மும்பை

நடிகை கங்கணா ரணாவத் விவகாரத்தில் தலையிடக்கூடாது. ஒதுங்கி இருக்கும்படி, மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல்கள் வந்துள்ளன.

கங்கணா ரணாவத் போதை மருந்து பயன்படுத்தியது தொடர்பாக எழுந்துள்ள புகாரை மும்பை போலீஸார் விசாரிப்பார்கள் என்று நேற்று சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், மும்பை குறித்தும் மகாராஷ்டிரா குறித்தும் நடிகை கங்கணா ரணாவத் காட்டமாக விமர்சித்தபோது, அதற்கு அனில் தேஷ்முக்கும் பதிலடி கொடுத்தார்.

அனில் தேஷ்முக் அளித்த பேட்டியில், “மும்பையும், மகாராஷ்டிராவும் ஒருவருக்குப் பாதுகாப்பாக இல்லை எனத் தோன்றினால், அவர்கள் தாராளமாக மாநிலத்தை விட்டு வெளியேறலாம்” எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் நேற்று அனில் தேஷ்முக் பேசும்போது, மும்பை போலீஸாரை விமர்சித்த கங்கணா ரணாவத்தைக் கடுமையாகக் கண்டித்தார்.

அவர் பேசுகையில், “மும்பைக்கும், மகாராஷ்டிராவுக்கும் பிழைப்பு நடத்த வந்த ஒரு பெண்ணை மும்பை வரவேற்று அன்புடன் நடத்தியது. ஆனால், மும்பை நகரைப் பற்றி கங்கணா அவதூறகப் பேசியது கண்டிக்கத்தக்கது. மும்பை போலீஸார் பற்றி பேசியும் பொறுப்பற்ற பேச்சு” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு தொலைபேசி வாயிலாக பல்வேறு எண்களில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வந்தவை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கங்கணா ரணாவத் இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசியில் அமைச்சர் தேஷ்முக்கிடம் பேசியவர்கள், கங்கணா ரணாவத் விவகாரத்தில் தலையிடாதீர்கள், ஒதுங்கியிருங்கள் என்று மிரட்டியுள்ளனர். ஏறக்குறைய காலையிலிருந்து அமைச்சர் தேஷ்முக்கிற்கு இமாச்சலப் பிரதேசத்திலிருந்து 5 மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன என்று அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் மிரட்டல் விடுத்த ஒருவர் தன்னுடைய பெயர் மிருதியுன்ஜெய் கார்க் என்று வெளிப்படையாகவே கூறி அமைச்சரை மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சார்ந்துள்ள தேசியவாதக் கட்சியின் அலுவலகத்துக்கும் மிரட்டல் அழைப்புகள் இன்று காலை வந்துள்ளன. அதில் கங்கணா ரணாவத் விவகாரத்தில் அமைச்சர் அனில் தேஷ்முக் தலையிடக்கூடாது என்று மிரட்டியும், தேசியவாதக் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மும்பைக்கு இன்று நடிகை கங்கணா ரணாவத் வருகை தரும் நிலையில் , உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x