Published : 09 Sep 2020 06:50 AM
Last Updated : 09 Sep 2020 06:50 AM

9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு செப்.21-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம்: வழிகாட்டி நெறிகளை வெளியிட்டது மத்திய அரசு

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து தேர்வுகள் நடத்தப்படாமலேயே 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடங்கள் தற்போது ஆன்-லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 21-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் என்னென்ன, எதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் அதில் அடங்கி உள்ளன. இதை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

தன்னார்வ அடிப்படையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை வரும் 21-ம் தேதி முதல் திறக்க வேண்டும். அப்போது சுகாதாரத் துறை அமைச்சகம் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். ஆசிரியர்கள் கூறும் விதிகளை மாணவ, மாணவிகள் கட்டாயம் பின்பற்றவேண்டும்.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி விட்டு வகுப்பறைகளில் அமர்தல், ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல், எச்சில் துப்புதலுக்குத் தடை போன்ற விதிகளை பின்பற்ற வேண்டும். அதேநேரத்தில் ஆன்-லைன் வகுப்புகளையும் தொடரலாம். இவ்வாறு சுகாதார துறை கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x