Published : 08 Sep 2020 04:27 PM
Last Updated : 08 Sep 2020 04:27 PM
மாநிலங்களவைத் துணைத் தலைவர் காலியாகியுள்ள நிலையில் அந்த பதவிக்கு எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துபின், கூட்டுவேட்பாளர் ஒருவரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக, கூட்டத்தொடரில் என்ன விவகாரங்களை எழுப்பலாம், எந்த விஷயங்களில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று அந்த கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக்குழுக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை எதிர்்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இரு அவைகளின் தலைமை கொறடாக்கள், துணை கொறடாக்கள் ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை வேண்டும் எனக் கோரி 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தபின், மீண்டும் இப்போதுதான் சோனியா காந்தியை காணொலி வாயிலாகப் சந்தித்தனர்.
மாநிலங்களவையின் துணைத் தலைவராக இருந்த பிஹார் எம்.பி. ஹரிவன்ஸ் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணைத் தலைவரைத் தேர்வுசெய்ய தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நத் கூட்டத்தில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு, எதிர்க்கட்சிகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து கூட்டு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பேசி ஒருமித்த முடிவு எட்டப்பட்டு வேட்பாளர் குறித்த தேர்வு இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது.
நடப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு கேள்வி நேரத்தை ரத்து செய்துள்ளது. அதுகுறித்து கேள்வி எழுப்பி, மீண்டும் கேள்விநேரத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்தும், தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உலக அளவில் 2-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியது போன்ற விவகாரங்களை அவையில் எழுப்பவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகள், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம், தற்போது எல்லையில் நிலவும் சூழல் குறித்து கூட்டத்தொடரில் பேசவும் முடிவெடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT