Published : 08 Sep 2020 02:18 PM
Last Updated : 08 Sep 2020 02:18 PM
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.33 ஆயிரம் கோடி மதி்ப்பில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்மட்டக்குழு அனுமதியளித்துள்ளது.
காவேரி படுகையில் அமைக்கப்படும் இந்த சுத்திகரிப்பு ஆலை மூலம், 90லட்சம் மெட்ரிக் டன் எண்ணெய் ஆண்டுக்கு சுத்திகரிக்கப்படும். பிஎஸ்-6 வாகனங்களுக்கான எரிபொருளை ஆண்டுக்கு 4 மெட்ரிக் மில்லியன் டன் அளவிலும் 1.8 மெட்ரிக் மில்லியன் டன் அளவில் கேசோலினும், 0.6 மெட்ரிக்மில்லியன் டன் அளவு சமையல் எரிவாயுவும் 0.3 மில்லியன் மெட்ரிக் டன் அளவு விமான எரிபொருளும் உற்பத்தி செய்ய முடியும்.
இதுகுறித்து நிபுணர் மதிப்பீட்டுக் குழு வெளியிட்ட அறிவிப்பி்ல் கூறப்பட்டு இருப்பதாவது ”சிபிசிஎல் நிறுவனம் நாகப்பட்டினம் மாவட்டம், பனகுடி கிராமத்தை ஒட்டிய பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு, செப்டம்பர் 20-ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவேரி படுகையில் 1,338.29 ஏக்கரிலும், புதுச்சேரியில் காரைக்கால் பகுதியில் 6.33 ஏக்கரிலும் இந்த சுத்திகரிப்பு ஆலைக்கு தேவையான எண்ணெய் குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
எண்ணெய் ஆலையிடம் 618.29 ஏக்கர் ஏற்கெனவே இருக்கிறது. தமிழகத்திலிருந்து கூடுதலாக 726.33 ஏக்கர் நிலவும், காரைக்காலில்ருந்து 6.33 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூலம் நேரடியாக 600 பேரும், மறைமுகமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் இணக்கம் மற்றும் பொதுவான நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் மற்றும் கடற்பகுதி ஒழுங்குமுறை மண்டலம்(சி.ஆர்.இசட்) அனுமதி வழங்க இந்த திட்டத்தை நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்தது.
இந்த திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்மட்டக்குழு அனுமதியளித்துள்ளது.
இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.32,908 கோடியாகும். சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக ஆண்டுக்கு ரூ.199.40 கோடியும், செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு ரூ.3 கோடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT