Published : 08 Sep 2020 01:01 PM
Last Updated : 08 Sep 2020 01:01 PM
இந்தியா-சீனா கட்டுப்பாடு எல்லைக் கோட்டுப்பகுதியில் இந்திய வீரர்கள் எந்தவிதமான அத்துமீறலிலும் ஈடுபடவில்லை, துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை. அத்துமீறலில் ஈடுபட்டதும், துப்பாக்கிச்சூடு நடத்தியதும் சீன ராணுவம்தான் என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் உள்ள பாங்காக் ஏரிப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் கட்டுப்பாடு எல்லைக்கோட்டை மீறி அத்துமீறி நடந்து கொண்டு, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு சீன ராணுவமும் பதில் நடவடிக்கை எடுத்தது என்று நேற்று இரவு சீன ராணுவத்தின் மேற்குபடை கமாண்டர் ஹாங் சுலி குற்றம்சாட்டியிருந்தார்.
சீன ராணுவத்தின் இந்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம் மறுத்து, அதற்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளது. இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அமைதிப்பேச்சு வார்த்தை அதிகாரிகள் மட்டத்திலும், அரசியல் தலைவர்கள் மட்டத்திலும் சென்று வரும்போது, அனைத்து ஒப்பந்தங்களையும், விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறி சீன ராணுவம் ஆத்திரமூட்டும் செயல்களில் எல்லைப்கட்டுப்பாடு பகுதியில் ஈடுபட்டது.
7-ம் தேதி இரவு(நேற்று) சீன ராணுவம், கட்டுப்பாடு எல்லைக் கோடு பகுதிக்கு அருகே வந்தபோது, அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தினர். அப்போது சீன ராணுவத்தின் ஒரு தரப்பினர் இந்திய ராணுவத்தை மிரட்டும் நோக்கில் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டனர்.
மிகவும் கடுமையான ஆத்திரமூட்டும் செயல்களில் சீன ராணுவம் ஈடுபட்ட போதிலும், இந்திய ராணுவம் மிகவும் முதிர்ச்சியுடன், பொறுப்புள்ள வகையில் நடந்து கொண்டு அவர்களைத் தடுத்துவிட்டது.
இதில் இந்திய ராணுவத்தின்ர எந்தகாரணத்தைக் கொண்டும் கட்டுப்பாடு எல்லைக் கோட்டை தாண்டிச் செல்லவில்லை, ஆக்ரோஷமாகவும் நடந்து கொள்ளவும் இல்லை, துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை.
சீனாவில் உள்ள மக்களையும் சர்வேச சமூகத்தையும் தவறாக வழிநடத்தவே சீன ராணுவத்தின் மேற்கு படைகள் இவ்வாறு பொய்யான செய்திகளைத் தெரிவிக்கின்றனர்.
கட்டுப்பாடு எல்லைக் கோடு பகுதியில் அமைதி, நிலைத்தன்மையை நிலைநாட்ட ராணுவம் உறுதிபூண்டுள்ளது. அதேசமயம் எந்த விலைக் கொடுத்தேனும் இந்தியாவின் இறையாண்மை, தேசிய ஒருமைப்பாட்டையும் காக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT