Published : 25 Sep 2015 02:52 PM
Last Updated : 25 Sep 2015 02:52 PM
ஐந்து கட்டங்களாக நடைபெறவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தம் மூத்த தலவைர்களுடன் சுமார் 700 பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த தேசிய ஜனநாயக முன்னணி திட்டமிட்டுள்ளது.
பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு தொகுதிக்கு குறைந்தது மூன்று கூட்டங்கள் நடக்க இருக்கும் இதன் இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இதில் கலந்துகொண்டு பேசும் தேஜமு-வின் தலைவர்கள் தம் உறுப்பினர்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
பாஜக சார்பில் இந்த கூட்டங்களுக்காக அதன் 40 முக்கியத் தலைவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் நபராக இடம் பெற்றுள்ள பிரதமர் நரேந்தர மோடி 20 கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அவரது முதல் கூட்டம் ஜார்கண்ட் மாநில எல்லையில் அமைந்துள்ள பாங்கா மாவட்டத்தில் இருந்து துவங்க இருக்கிறது. இங்கு அக்டோபர் 12 ஆம் தேதி துவங்க இருக்கும் முதல் கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது.
இது குறித்து 'தி இந்து'விடம் பாஜகவின் பிஹார் மாநில கட்சித் தலைவரான மங்கள் பாண்டே கூறுகையில், "அநேகமாக காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2-ல் பிரதமரின் முதல் கூட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியின் தேசிய நிர்வாகிகள் யோசனையின்படி தயாரிக்கப்பட்ட தலைவர்களின் பிரச்சாரப் பட்டியல், தேர்தல் ஆணையத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது" எனத் தெரிவித்தார்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது பெயராக கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா மூன்றாவது மற்றும் நான்காவதாக எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் பிஹார் தலைவர்களாக 33 ஆவதாக பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹா, 35 ஆவதாக சையது ஷானாவாஸ் உசைன் ஆகிய பெயர்களும் உள்ளன.
இத்துடன், மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், நித்தின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், அருண்ஜேட்லி ஆகியோரும் பிரச்சாரப் பட்டியலில் உள்ளனர். மாநில முதலமைச்சர்களில் மபியின் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஜார்கண்டின் ரகுபர்தாஸும் பிஹாரில் தேஜமு வேட்பாளர்களின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
இங்கு தேஜமுயுடன் சேர்த்து மொத்தம் நான்கு கூட்டணிகள் மோதுகின்றன. இதன் இறுதி முடிவுகள் நவம்பர் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT