Published : 08 Sep 2020 09:54 AM
Last Updated : 08 Sep 2020 09:54 AM

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, பொருளாதாரத்தை மீட்க மோடியிடம் திட்டமுள்ளதா?... அல்லது கடவுள் மீது பழியா? - காங். தலைவர் சுர்ஜேவாலா கடும் விமர்சனம் 

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா தொற்றை அரசு எவ்வாறு தடுக்கப்போகிறது? வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை எப்படி மீட்கப் போகிறார் இதற்கெல்லாம் பிரதமர் மோடியிடம் பதில் இருக்கிறதா என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மெய்நிகர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

அலட்சியம், திறமையின்மை மற்றும் தோல்வியடைந்த தலைமை ஆகியவற்றால் நாட்டில் கரோனா நிலைமை இவ்வளவு மோசமாகி உள்ளது. மக்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ளுமாறு அரசுவிட்டு விட்டது.

காங்கிரஸ் கட்சியும், மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்தும் கூட, ‘கண்டுபிடி, தனிமைப்படுத்து, சிகிச்சையளி’ என்ற கொள்கையை கடைப்பிடித்து தொற்றை கட்டுப்படுத்தவில்லை. பரிசோதனையை அதிகரிக்கும் தேவை இருந்தபோதும், அதை புறந்தள்ளியதுடன், ஊரடங்கு காலத்தில் கூட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது அதிகரித்து வரும் தொற்றை அரசு எப்படி கட்டுப்படுத்தப்போகிறது? இதற்காக என்ன உத்தியை பின்பற்ற வேண்டும் என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தனது தோல்வியடைந்த தலைமை குறித்து பதிலளிப்பாரா?

கரோனா தொற்று தற்போது சிறிய நகரங்கள், கிராமங்களிலும் பரவி வருகிறது. ஆனால் மோடி அரசு இன்னும் அறியாமை மற்றும் அலட்சியத்திலேயே இருக்கிறது. இது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஏனெனில் 65 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கின்றனர்.

இந்தியா கரோனாவின் 2-வது அலையை சந்தித்து வருவதாக ஏராளமான நிபுணர்கள் கணித்துள்ளனர். சமூக பரவல் தொடங்கியுள்ளதாகவும் சிலர் கூறியுள்ளனர். ஆனால் மோடி அரசு இதை அறியவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை பிரதமர் மோடி எவ்வாறு மேம்படுத்துவார். இதற்கு மத்திய அரசிடம் தீர்வு உள்ளதா? அல்லது கடவுள் மேல் பழி சுமத்துவார்களா? என்று சுர்ஜேவாலா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x